Thursday 27 March 2008

திருமணத்தில் ஆர்வம் இல்லாத பிரிட்டன் மக்கள்!

திருமணம் செய்து கொள்வதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறதாம்.

இங்கிலாந்து தேசிய புள்ளியியல் துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தற்போது உள்ள மக்கள் தொகையில் பாதியளவுக்கும் சற்றே கூடுதலாக கடந்த 1895ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு கால கட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான திருமணங்கள் நடந்த ஆண்டு 2006 தான்.

அந்த ஆண்டில் 1000 பேரில் 10 பேர் மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆண்களில் 100 பேருக்கு 22.8 பேரும், பெண்களில் 20.5 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமண சராசரி விகிதம் முதன் முதலில் 1862ம் ஆண்டுதான் கணக்கிடப்பட்டது. அந்த ஆண்டில், ஆண்களின் திருமண சராசரி 58.7 ஆகவும், பெண்கள் விகிதம் 50 ஆகவும் இருந்தது.

2ம் உலகப் போரின்போது பெண்களின் திருமண சராசரி விகிதம் 40க்குக் கீழ் குறைந்ததில்லை. அது 1995ம் ஆண்டு 30க்கும் கீழாக குறைந்தது. இதுதான் முதன் முதலில் ஏற்பட்ட கணிசமான குறைவு விகிதம் ஆகும்.

ஓய்வு பெறும் வயதை ஒட்டிய 4 பெண்களில் ஒருவர் ஆண் துணையுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார். முதன் முதலில் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண், பெண்களின் வயது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. ஆண்களைப் பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 32 ஆகவும், பெண்களுக்கு 30 வயதாகவும் உள்ளது.

பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்கள் தனித்தும், தேவையானால் சேர்ந்து வாழ்வதும், விருப்பம் இல்லாவிட்டால் பிரிந்து விடுவதுமாக உள்ளனர். இடையில் எதற்கு திருமணம் என்ற பந்தம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பியர்கள் அல்லாத குடிமக்கள், திருமணம் செய்து கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனாலும் கூட திருமணங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் குடியேறுவோர், குடிமக்கள் அந்தஸ்தைப் பெறுவதற்காக இங்கிலாந்துக்காரர்களை போலியாக திருமணம் செய்வது அதிக அளவில் நடந்து வந்தது. 2004ம் ஆண்டு மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரம் திருமணங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமணம் செய்து கொள்வோருக்கு வழங்கப்பட்டு வந்த வரி உள்ளிட்ட சலுகைகள் திரும்ப பெறப்பட்டதும் கூட திருமணங்களின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணமாகும்.

இன்னொரு முக்கிய அம்சமாக, குழந்தைகளுடன் வாழும் தனி நபர்களுக்கு அங்கு வரிச் சலுகை கிடைக்கிறது. மாறாக குழந்தைகளுடன வாழும் தம்பதிகளுக்கு சலுகைகள் இல்லை. இதனாலும் கூட, கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் கொள்கையை பலர் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 10 லட்சம் ஜோடிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும், கமிட்மென்ட்களும் இல்லாமல் தனித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதாம்.

இந்த ஆய்வை நடத்தியவரான மோர்கன் கூறுகையில், நிலையான குடும்பங்கள்தான் மிகச் சிறந்தது. அப்போதுதான் தங்களுடைய குழந்தைகளை சிறந்தவர்களாக, சமூக விரோத எண்ணத்துடனும், குற்ற எண்ணத்துடனும் இல்லாமல் வளர்க்க முடியும். குடும்பச் சிதைவுதான் குற்றங்களுக்கான முதல் படிக்கட்டு என்கிறார்.

கல்யாணம், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப முறை என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் பொருந்தக் கூடியது என்பதை இங்கிலாந்துக்காரர்கள் உணர்ந்தால் சரி.

No comments: