Friday, 28 March 2008

அமெரிக்காவில் 2 இந்திய ராணுவ வீரர்கள் 'எஸ்கேப்'

Soldier
கலிபோர்னியா: கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய வீரர்களில் 2 பேரை பத்து நாள்களாகக் காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்ற வீரர்களில் சஞ்சய் மஹதோ, சந்தோஷ் தாபா ஆகிய வீரர்கள் அங்கிருந்து மாயமாகிவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், பணியில் இருக்கும்போது 'தகவல் தராமல் விடுப்பில் சென்றுள்ளதாக' அவர்கள் கருதப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன வீரர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் போலீசாரை தூதரக அதிகாரிகள் அணுகியதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 2005ல் முதன்முறையாக பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து 2006ல் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க மெரைன் படை வீரர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் ராணுவ முகாமில் இந்திய வீரர்களுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பெண்டில்டன் தளத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி எடுப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: