வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவில் கலாட்டா
சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார்.
"நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறான். எனக்கு வேலை கொடுக்காத கம்பெனிகளை குண்டு வைத்து தகர்க்கப்போகிறேன். குண்டு செய்வதற்காக, ரசாயன பொருள் திருடுவதற்காகவே இங்கு வந்தேன்'' என்று அந்த வாலிபர் ஆவேசமாக பேசினார். அவர் போதை மயக்கத்தில் இருந்தார். உடனே இது பற்றி கல்லூரி காவலாளி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ராமசுப்பிரமணி, உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் மோகன், தியாகராஜன் ஆகியோர் உடனடியாக போலீஸ் படையுடன் பிரசிடென்சி கல்லூரிக்கு சென்றார்கள். அதற்குள் கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் தப்பி சென்று விட்டார். அவரை திருவல்லிக்கேணி பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
என்ஜினீயர்
அவரை அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. அவரது பெயர் சந்திரசேகரன் (வயது 24). திருச்சி அருகே உள்ள சமயபுரத்தை அடுத்த நரசிம்ம மங்கலம் இவரது சொந்த ஊராகும். எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காத விரக்தியில் மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் அவரது நண்பருடன் அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். மன உளைச்சலில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு காற்று வாங்கிவிட்டு திருவல்லிக்கேணி சென்று மது அருந்தி உள்ளார். போதை மயக்கத்தில் பிரசிடென்சி கல்லூரிக்குள் நுழைந்து திருட முயற்சித்து உள்ளார். தனது குடும்பச் சொத்தை தனது தந்தையை ஏமாற்றி, உறவினர்கள் அபகரித்து விட்டதாகவும், தந்தையை ஏமாற்றிய உறவினர்களை குளோராபாம் மயக்க மருந்து கொடுத்து கடத்த திட்டமிட்டதாகவும், குளோரோபாம் மயக்க மருந்து திருடவே, கல்லூரிக்குள் நுழைந்ததாகவும், அந்த வாலிபர் கதை விட்டார்.
தீவிரவாதியா?
மேலும் அந்த வாலிபர் நக்சலைட்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், போலீசாரிடம் பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பூந்தமல்லியில் அவர் தங்கி இருந்த அறையை சோதனை போட்டனர். அவரது நண்பரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் தீவிரவாதியாகவோ அல்லது தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவோ செயல்பட்டதற்கான எந்த தடயங்களும், ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
கைது
வேலை கிடைக்காத விரக்தியில்தான், அவர் போதையில் கல்லூரிக்குள் நுழைந்து திருட முயற்சித்து ரகளையிலும் ஈடுபட்டு உள்ளார், என்று போலீஸ் விசாரணையில் உறுதியானது. இதையொட்டி, கல்லூரிக்குள் நுழைந்து ரகளை செய்த குற்றத்துக்காக என்ஜினீயர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார்.
அவரது தந்தை பெயர் வெங்கடாசலபதி. நெசவுத் தொழில் செய்கிறார். ஒரு அண்ணனும், தங்கையும் உள்ளனர். சந்திரசேகரன் மீது திருட்டு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார், என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Sunday, 30 March 2008
அதிக மதிப்பெண் கிடைத்தும் பலன் இல்லை வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறிய என்ஜினீயர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment