Friday 28 March 2008

ஊழியர்களைத் தக்க வைக்க புது உத்திகளை கையாளும் அமெரிக்க நிறுவனங்கள்

பணமே வாழ்க்கையல்ல!: ஊழியர்களைத் தக்க வைக்க புது உத்திகளை கையாளும் அமெரிக்க நிறுவனங்கள்

நியூயார்க், மார்ச் 27: அமெரிக்க பொருளாதாரம் மந்தகதியில் உள்ளதாலும், ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க முடியாததாலும் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் புது உத்திகளை கையாளத் தொடங்கியுள்ளன.

நிறுவனத் தலைவர்களிடம் நிர்வாக செயல் திட்டம் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

"பணமே வாழ்க்கையோ அல்லது முடிவோ அல்ல' என்பதைப் புரிய வைக்க நிறுவனம் தொடர்பாக முடிவெடுப்பதில் ஊழியர்களையும் பங்கு கொள்ள வைக்கத் தொடங்கியுள்ளனர்.

"தலைமை நிர்வாகிகள் தங்களுடன் திறந்த மனதுடன் பேசுதல், உரிய அங்கீகாரம் அளித்தல், முடிவெடுப்பதில் பங்கு ஆகியவற்றுக்கே ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வரக்கூடிய சில மாதங்களில் இந்த விஷயங்களுக்கே அதிக கவனம் கொடுக்கப் போவதாக சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பணரீதியான ஆதாயத்தை விட திறந்த மனதுடன் பேசுதல் அதிக பலன் அளிக்கும்' என அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாகக் கூறுகிறார் கலிபோர்னியாவின் வாலென்சியாவில் உள்ள வான்டேஜ் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மைய முதல்வர் ஆலன் ஹாப்ட்ஃபெல்ட்.

ஊழியர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்ற பணிச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் அது பண ஆதாயத்தைவிட அதிக பலன் தரும் என்பது தெளிவு என்கிறார் அவர்.

பணரீதியாக அல்லாமல் ஊழியர்களை மற்ற வழிகளில் ஊக்குவிப்பது அவசியம் என்பதை நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர் என்கிறார் நிர்வாக செயல் திட்டத் தலைவர் லீ பிராஸ்சீசர். ஊழியர்களுக்கு தகுந்த அங்கீகாரம் அளித்தால் அவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறுவதில்லை. தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழி உள்ளது என்பதும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது என்கிறார். முன்னேற்றத்துக்கு தெளிவான வழி, எதிர்காலம் குறித்து தெளிவு ஆகியனவும் திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக நிறுவனத்தின் இலக்கு, நிறுவனத்தின் வெற்றி, அதில் ஊழியர்களது பங்கு ஆகியவை குறித்து தெளிவாகப் புரியவைப்பதும் ஊழியர்களைத் தக்கவைக்க தலைமை நிர்வாகிகள் மேற்கொள்ள உள்ள உத்திகளில் அடங்கும் என்கிறார் லீ பிராஸ்சீசர்.

1 comment:

Unknown said...

//"பணமே வாழ்க்கையோ அல்லது முடிவோ அல்ல' என்பதைப் புரிய வைக்க நிறுவனம் தொடர்பாக முடிவெடுப்பதில் ஊழியர்களையும் பங்கு கொள்ள வைக்கத் தொடங்கியுள்ளனர்.//

ஹஹஹஹா...நல்ல நகைச்சுவை. அதுவும் சொல்றது யாரு? அமெரிக்க நிறுவனம் :)