தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்கள் நலன் காக்கக் கோரியும், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாள் தொல். திருமாவளவன், பல்வேறு தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து தலைவர்கள் கோஷமிட்டனர். மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் ராமதாஸ் பேசுகையில், சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் என ஹைதராபாத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். உறக்கத்தைக் கலைக்க வேண்டும். இலங்கை பிரச்னையை தீர்க்க இதுதான் சரியான தருணம். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
10 ஆண்டுக்கு முன், 1998 ஜூன் மாதத்தில் எனது தலைமையில் சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட எம்.பிக்கள் வாஜ்பாயை சந்தித்து மனுக் கொடுத்தோம். அந்த மனுவில், இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாடு தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை இந்திய அரசு மாற்ற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும் என, வலியுறுத்தினோம்.
அந்த மனுவில் முதலில் கையெழுத்திட்டவர் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.
உங்கள் காலத்திலேயே இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். இது நல்ல தருணம். கருணாநிதி நழுவ விடக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் போல தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பாமக முனைப்போடு செயல்படும் என்றார்.
Thursday, 27 March 2008
ஈழம்-உறக்கத்தை அரசு கலைக்க வேண்டும்-ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment