Wednesday 26 March 2008

3 கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் : பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் டால்மியா கைது

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பி.சி.சி.ஐ. நிதியில் இருந்து சுமார் 3 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, அவர் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

டால்மியா மீதான புகார் தொடர்பாக, விசாரணை நடத்திய மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவர் குற்றவாளி என்பதை உறுதிசெய்தனர். இதனையடுத்து, டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய டால்மியாவின் வழக்கறிஞர் திரு. சதிஷ், இந்தக் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறி மத்திய அமைச்சரும், கிரிக்கெட் வாரிய தலைவருமான திரு. சரத்பவாரை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.


பி.சி.சி.ஐ. மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கைது செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments: