Saturday 8 March 2008

சிரிப்பை அளக்க வருது டிஜிட்டல் கருவி

“வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி விட்டனர். ஆனால், எத்தனை பேர் சிரிக்கின்றனர்… அப்படியே சிரித்தாலும் வாயார, வயிறு குலுங்க சிரிக்கின்றனரா? இப்படி சிரித்தால் தான் உடலுக்கு நல்லது; இல்லாவிட்டால், “இதயத்துக்கும், வயிற்றுக்கும் தொல்லை ஆரம்பித்து, பல நோய்களுக்கு காரணமாகி விடும்’ என்று ஜப்பான் நிபுணர் எச்சரித்துள்ளார். ஜப்பான் ஒகாசா பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பின் அளவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித் துள்ளார். அவர் கூறியதாவது: வாயார, வயிறு குலுங்க சிரித்தால் தான் இயல்பான சிரிப்பு. சிரிக்கும் போது, பல முறை “ஹாஹ்..ஹாஹ்…’ என்று சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக, ஒரு நொடிக்கு 10 தடவையாவது இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் தான் மின் அதிர்வுகள் உடலில் பரவி, உடல் முழுமையாக இயங்கும்; சுரப்பிகள் வேலை செய்யும்; அவை வேலை செய்தால் தான் உடல் உறுப்புகள் சரிவர இயங்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதயத்துக்கும், வயிற்றுக்கும் இடையே இருக்கும் தசைகள் மிக முக்கியமானவை. இந்த பகுதி பெயர் உதரவிதானம். சிரித்தால் இந்த தசைகள் முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும். கம்ப்யூட்டர் சுவிட்சை போட்டு, அதை இயங்க வைப்பது போல, உடலை முழு வேகத்தில் இயங்க வைக்க இந்த தசைகள் புத்துணர்ச்சி பெறுவது முக்கியம்.

அவை முடங்கி விடக்கூடாது. அப்படி முடங்காமல் வைப்பது சிரிப்பு மட்டும் தான். மனதுக்குள்ளிருந்து வராமல், பெயரளவில் சிரிப்பதால், இந்த தசைகள் புத்துணர்ச்சி பெறாது; மனம் விட்டு சிரித்தால் தான் முழு வேகத்தில் இயங்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் “ஹாஹ்…ஹாஹ்…’க்கள் வெளிப் பட்டால் தான் , தேவையான மின் அதிர்வுகள் உடலில் ஏற்படும். இதற் காக ஒரு டிஜிட்டல் கருவியை கண்டு பிடித்துள்ளேன்.

இந்த கருவி மூலம், நம் உடலில் உள்ள மின் அதிர்வுகளை கணக்கிடலாம். சிரிப்பதன் மூலம், அந்த அதிர்வுகள் தொடர்ந்து இருக்கும். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலே தசைகளின் மின் அதிர்வுகள் நீடிக்கும். இந்த மின் அதிர்வுகள் தொடர்ந்தால், மூளை நரம்புகள் வலுவாக இருக்கும்; பாதிப்பு வராது. இவ்வாறு கிமுரோ கூறினார். மொபைல் போன் போன்ற கையடக்க கருவி இது. எப்போதும் கையில் வைத்திருந்து சிரிப்பை அளந்து கொள்ளலாம். ஜப்பானில் விரைவில் விற்பனைக்கு வருகிறது; சில ஆண்டில் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

No comments: