Monday 31 March 2008

பெங்களூரில் தமிழ் தியேட்டர்கள் மீது தாக்குதல்

Bangalore
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர்.

மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் இருட்டடிப்பு செய்யப்படும் என கன்னட ரக்சன வேதிகே என்கிற கன்னட வெறியர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கு நேற்று சென்னையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஓகனேக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் குதித்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் குவிந்த அவர்கள் அங்குள்ள நடராஜ் மற்றும் வினாயக் ஆகிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து உடைத்தனர். தியேட்டர் இருக்கைகளையும் கிழித்தெறிந்தனர்.

பின்னர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்த அக்கும்பல் அங்கு தமிழர்கள் வைத்துள்ள கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சேஷாத்ரிபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: