Saturday, 29 March 2008

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியரை விடுவிக்க முடியாது

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியரை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என்று மலேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கைது
மலேசியாவில் வெள்ளையர் ஆட்சியின்போது தோட்ட தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள், பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். அவர்களை மலேசிய போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த இந்து நடவடிக்கை உரிமைப்படையைச் (ஹிண்ட்ராப்) சேர்ந்த 5 முக்கிய தலைவர்களை மலேசிய அரசு, உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த சட்டப்படி, யாரை வேண்டுமானாலும் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அதன்படி, இவர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி

இந்நிலையில், கடந்த 8-ந் தேதி மலேசிய பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், சிறையில் உள்ள 5 பேரில் ஒருவரான வக்கீல் எம்.மனோகரனை ஜனநாயக நடவடிக்கை கட்சி என்ற எதிர்க்கட்சி, வேட்பாளராக நிறுத்தியது. இக்கட்சிதான், மனோகரன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மனோகரனுக்காக அவரது மனைவி புஷ்பநீலா, தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் மலேசிய இந்தியர்களின் பலத்த ஆதரவால், மனோகரன் வெற்றி பெற்றார். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, மலேசிய அரசு இன்னும் சிறையில் இருந்து விடுவிக்கவில்லை.

மனோகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், வக்கீல் அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. மனோகரனை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் ஏப்ரல் 2-ந் தேதி அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே, மனோகரனை அரசு விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுவிக்க முடியாது

ஆனால் இந்த கோரிக்கைகளை மலேசிய அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து மலேசிய உள்துறை மந்திரி சையது ஹமீது அல்பர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை நாங்கள் அப்படியே ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும்தான் நாங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டி இருக்கிறது. கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 5 பேரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் என்ற நிலை தோன்றும்போதுதான், அவர்களை விடுதலை செய்வது பற்றி நாங்கள் பரிசீலிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: