Tuesday 25 March 2008

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய சினிமா

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது.

`பிரபாகரன்' சினிமா

சென்னை கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகே ஜெமினி கலர் லேப் உள்ளது. இந்த லேப்பில், `பிரபாகரன்' என்ற சிங்கள மொழிப்படம் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.

இந்த தகவலை கேள்விப்பட்டதும், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குனர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஜெமினி கலர் லேப் முன்பு குவிந்தனர்.

`பிரபாகரன்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சினிமாவில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சத்தம் கேட்டு லேப்பில் இருந்து வெளியே வந்த அந்த சினிமா படத்தின் இயக்குனர் பெரீஷ் என்பவரையும் அடித்து உதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமாதானம்

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து `பிரபாகரன்` சினிமா படத்தை, 27-ந் தேதி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு போட்டுக் காண்பிப்பது எனவும், அவர்கள் படம் குறித்து ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் படத்தை பிரிண்ட் எடுக்க அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments: