Wednesday, 30 April 2008

இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள்

இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுற்றி வளைப்பு

இந்திய கடலோர காவல் படையினர், அதிகாரி ராஜன் தலைமையில் கடந்த 28-ந் தேதி இரவு சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடலோர எல்லை அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.

அங்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் விசைப் படகுகளில் இருந்த 15 இலங்கை மீனவர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது

மீனவர்களையும் பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் கடலோர காவல் படையினர் நேற்று சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

அப்போது இலங்கை மீனவர் கிறிஸ்டோபர் என்பவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே, அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன் பின், இலங்கை மீனவர்கள் 15 பேரும் ராயபுரம் உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் சபானந்தத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இறுதி முடிவு

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மீனவர்கள் அனைவரும் இலங்கையின் நீர்கொழும்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பின் கலெக்டர் தலைமையில் உள்ள கூட்டு நடவடிக்கை குழு முன்பு இவர்களை ஆஜர்படுத்த இருக்கிறோம். அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார்கள்'' என்றார்.

1 comment:

ttpian said...

collerieum!(EYE WASH!)