Wednesday 30 April 2008

இலங்கை - ஈரான் காதல் சடுகுடு : செல்வம்

இலங்கை - ஈரானுக்கிடையில் ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து:

இலங்கைக்கும், ஈரானுக்குமிடையில் ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏப்ரல் 28ல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் இலங்கை பெருமளவு நன்மையடையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்பு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டில் விவசாய உற்பத்தித்துறைக்கு முக்கியத்துவமளித்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஈரான் அரசாங்கம் வழங்கவுள்ள பொருளாதார உதவியானது நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த காலகட்டத்தில் கிடைக்கவுள்ள பிரயோசனமிக்க உதவியாகும் என்று தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய ஈரானிய ஜனாதிபதிக்கும், பிரதிநிதிகளுக்கும் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயத்தின் இரண்டாம் கட்ட இவ் விஜயத்தின் போது இரு தலைவர்களும் பல்தரப்பு மற்றும் பிராந்தியத்துக்குரிய பிரச்சினைகள் பற்றியும் விரிவாக உரையாடியதுடன் ஈரானியத் தலைவர் தலைவர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவையும் நேற்று (ஏப்ரல் 29) சந்தித்து உரையாடினார். நாட்டின் சகல மதங்களையும் சேர்ந்த சமயப் பெரியார்களையும் ஈரானிய ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.

ஈரான் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது மொத்தம் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படன. வர்த்தக, கப்பல் சேவைத்துறையில் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவி, உமாஓயா பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் விஸ்தரிப்பு, மின் உற்பத்தி, சுங்கம், சுற்றுலா மற்றும் இரு தரப்பு வானொலி தொலைக்காட்சி பிரிவர்த்தனை வலைப்பின்னல், ஊடக ஒத்துழைப்பு போன்ற விடயங்களுக்கு உதவி வழங்கல் போன்றவை இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட்டு உள்ளன என அறிய முடிகின்றது.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைக்கு 200 பில்லியன் ரூபாவுக்கு (2 பில்லியன் டொலர்) மேற்பட்ட உதவி கிடைக்கவுள்ளது என ஈரானின் இலங்கைத் தூதவர் எம்.எம். ஸஹைர் தெஹ்ரானிலிருந்து தெரிவித்தார். தனி நாடொன்றிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆகக் கூடுதலான உதவித் தொகை இதுவே என அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி அனர்த்தத்தின்போது இலங்கைக்கு 3.2 பில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என அபிவிருத்தி நாடுகள் வாக்குறுதியளித்திருந்தன. பரிஸ் உதவி வழங்கும் கூட்டத்தில் 4 பில்லியன் டொலர் உதவியாக வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மனித உரிமை மீறல் நல்லாட்சி தொடர்பான நிபந்தனைகளை வைத்து இந்த உதவிகளில் அரைவாசியும் இதுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Sri Lankan & Iranian Presidents

”ஈரானின் உதவிகள் எமது சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வெகு மதிகளாகும்” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச:
ஈரானிய அரசு எமக்கு வழங்கியுள்ள உதவிகள் எமது சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்த வழங்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த வெகுமதிகளாகுமஎன சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தல் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் நேற்று (ஏப்ரல் 29) காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது ஈரான் ஜனாதிபதி முஹம்மத் அஹமதி நெஜாத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நவீனமயப்படுத்தல் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது, ”எமது நாட்டுக்கான உதவிகளை வழங்குவதன் மூலம் ஈரான் அரசு இலாபங்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக மனித வர்க்கத்துக்காக நீட்டும் நட்பின் சின்னமாக நாம் இதனைக் காண்கின்றோம். சமாதானம், சகோதரத்துவம், நீதி, நியாயம் என்பனவற்றை ஈரான் வெளிநாட்டுக் கொள்கையாகக் கொண்டுள்ளது. அதிகமான நாடுகளுடன் நற்புறவையும் ஈரான் அரசு பேணிவருகின்றது. சப்புகஸ்கந்தை, உமாஓயா வேலைத்திட்டங்களை ஈரானின் நட்புச் சின்னமாக நாம் காண்கிறோம்.

ஈரானும், இலங்கையும் காலம் காலமாக நெருங்கிய முறையில் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டுள்ளதற்கான சான்றுகள் எம்மிடமுள்ளன. எமது பாரம்பரிய ஏடுகளில் ஈரானை ‘பேர்ஸியா’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. உங்கள் நாட்டின் மூதாதையர்கள் முற்காலங்களில் எமது நாட்டுக்கு வந்து சென்றுள்ளதற்கான சான்றுகள் எம்மிடமிருக்கின்றன. ஈரான் நாட்டின் திட்டமிடலுக்கு அமைவான முறையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள், மதச் சின்னங்கள் இன்னும் எமது மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அனுராதபுரம், சீகிரியா, பொலன்னறுவையில் இவைகள் இன்னும் உள்ளன.

கி.பி. 20 – 25இல் வாசிகதிஸ்ஸ அரசர் காலத்தில் எமது நாட்டுக்கும், பேர்ஸியாவுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பிருந்தமைக்கான சான்றுகள் எம்மிடமுள்ளன. இன்று அல்ல கடந்த அயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேர்ஸியாவிற்கும், இலங்கைக்குமிடையில் இடம்பெற்ற கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான நாணயங்கள் எம்வசமுள்ளன.

முற்காலங்களில் எமது நாட்டுடன் அதிகமான நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டன. ஒரு கட்டத்தில் ரோம் நாட்டின் வர்த்தகரொருவர் வந்து பேர்ஸியா நாணயத்தை விட ரோம் நாணயம் பெறுமதி மதிக்கதெனத் தெரிவித்தார். ஈரான் ஜனாதிபதியவர்களே, நாணயங்களை விட உங்களது நாட்டின் நட்பு எமக்கு பெறுமதிமிக்கது. தேசங்களுக்கிடையிலான ஒற்றுமை முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக முஸ்லிம்கள் யுத்தத்தின் காரணமாக அதிகமாக பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் இலக்காகி உள்ளார்கள். இஸ்ரேல், பலஸ்தீன் மோதல் உட்பட பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் யுத்த நிலைமைகள் காரணமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கடமையாற்றியதன் மூலம் அந்த மக்களின் பிரச்சினைகள், துன்பங்கள் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள முடிந்தது.


ஒரு சமூகம், இன்னொரு சமூகத்தை பணயமாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லையென கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நான் உறுதியளித்திருந்தேன். பல தசாப்தகாலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கு இரண்டு மாதங்கள் மாத்திரமே செலவாகியது. மின்சாரம், பெருந்தெருக்கள், கல்வி ஜீவனோபாய அபிவிருத்தி மாத்திரமன்றி 20 ஆண்டுகளுக்குப் பின் கிழக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மீளக் கிடைக்கவும் வழியமைத்துள்ளோம். ஈரானிய அரசு எமக்கு வழங்கும் பரிசுகள், எமது நாட்டின் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள வழங்கும் சிறந்த வெகுமதிகளாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் இரு நாடுகளினதும் நட்புறவினை எமது எதிர்கால சந்ததியினர் மிக அன்போடும், ஆதரவோடும் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்’’ என்றார்.

Sri Lankan & Iranian Presidents”அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து வாழலாம்” ஈரான் ஜனாதிபதி அஹ்மத் நெஜாத்:
அணுசக்தி நெருக்கடி ஏற்பட்டபோது அதனை நாம் ஒன்றுபட்டு எதிர்கொண்டு மீட்சிபெற்றோம். இதேபோல் இலங்கையரும் ஒன்றுபட்டுச் செயற்படும்போது தனித்துவத்துடன் தலைநிமிர்ந்தவர்களாக வாழ முடியும் என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி அஹ்மத் நெஜாத் நேற்று (ஏப்ரல் 29) கொழும்பில் தெரிவித்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதத் தலைவர்களுடனான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”ஈரான் ஒருகாலத்தில் மேற்குலக சக்திகளுக்கு அடிமைப்பட்டு இருந்தது. மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) தலைமையில் 1979ஆம் ஆண்டில் இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சி காரணமாக இந்த அடிமை நிலைமை முடிவுக்கு வந்தது. இப்போது நாம் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்தவர்களாக வாழுகின்றோம். இதன் பயனாக இலங்கையுடன் கூட நெருக்கமான உறவைப் பேணக்கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

ஒரு நாட்டில் வாழுகின்ற சகல இன, மத, மொழி மக்களும் ஒன்றுபட்டுச் செயற்படும்போது வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளால் அவ்வாறான நாடகளில் எதுவுமே செய்ய முடியாது. இதற்கு ஈரான் நல்ல உதாரணமாக விளங்குகின்றது. ஈரான் அணுசக்தி நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்தது. இதனை ஈரானிய மக்கள் ஒன்றுபட்டு எதிர்கொண்டார்கள். இதன் பயனாக இந்நெருக்கடிகளில் இருந்து நாம் மீட்சி பெற்றிருக்கிறோம். இது உலக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாகும். இலங்கையரும் ஒன்றுபட்டு செயற்படும்போது தனித்துவத்துடன் தலைநிமிர்ந்தவர்களாக வாழக்கூடிய வசதி வாய்ப்புக் கிடைக்கும்.

இலங்கையரை நான் பெரிதும் நேசிக்கிறேன். மீண்டும் இங்கு வரக்கூடிய வாய்ப்பும், உங்களுடன் கலந்துரையாடக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கப்பெறும் எனவும் நம்புகிறேன். இலங்கை மதத் தலைவர்கள் ஈரானுக்கு தாராளமாக வருகை தரமுடியும். எமது மதத் தலைவர்களுடனும், மக்களுடனும் கலந்துரையாடலாம். ஈரான் உங்கள் நாடு. நீங்கள் விரும்பியபடி தாராளமாக வந்து போகலாம்.

இதேநேரம், நாம் உலகின் தற்போதைய நிலைமைகளையும் பார்க்க வேண்டும். சில சக்திகள் உலகின் பல பிரதேசங்களில் மோதல்களைத் தோற்றுவித்து வருகின்றன. இதன் மூலம் அப்பாவி மக்கள் அழிவக்கு இச்சக்திகள் துணை நிற்கின்றன. இச்சக்திகள் நாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்கின்றன. வளங்களையும் சுரண்டுகின்றன. யாதுமறியா குழந்தைகளையும், பெண்களையும் அவர்களது வீடுகளிலேயே இச்சக்திகள் படுகொலை செய்கின்றன. இன, மத மோதல்களைக்கூட இச்சக்திகள் ஏற்படுத்துகின்றன.

தங்களது நலன்களுக்காகவே இச்சக்திகள் இப்படிச் செய்கின்றன. மனிதாபிமானத்துக்கும், கருணைக்கும், அன்புக்கும் பதிலாக அணு குண்டுகளையும், இரசாயன குண்டுகளையுமே இச்சக்திகள் கொண்டிருக்கின்றன. இவற்றை விற்பனை செய்வதற்காக நாடுகளுக்கு இடையிலும், இன, மதங்களுக்கிடையிலும் இச்சக்திகள் சண்டைகளை மூட்டிவிடுகின்றன.

இவர்கள் நாடுகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களையும் விதைக்கிறார்கள். இச்சக்திகள் மேற்கொள்ளும் கலாசார ஆக்கிரமிப்பு காரணமாகவே மனித விழுமியங்கள் கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இப்படியான நிலையில் மனித சமூகம் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவன் மனிதனைப் படைக்கவில்லை. மாறாக குரோதம், பகைமை என்பவற்றுக்கு அப்பால் ஆளுக்காள் உதவிக்கொண்டு அன்பாகவும், சிநேகபூர்வமாகவும், ஐக்கியமாகவும் மனித சமூகம் வாழ வேண்டுமென்பதே இறைவனின் எதிர்பார்ப்பாகும்.

உலகை ஆட்டிப் படைத்து கொடுமை செய்யும் சக்திகள் வெகு விரைவில் உலகிலிருந்து அழிந்து அருகிவிடும். இந்த சக்திகள் வீழ்ச்சி இப்போது ஆரம்பித்து இருப்பபதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. அதேநேரம், நீதி, நேர்மை, நட்பறவு உலகில் மேலோங்கக்கூடிய காலமும் வெகு தொலைவில் இல்லை. அப்போது உலகில் அன்பும், கருணையும், சிநேகமுமே ஆட்சி செய்யும்” என்றார்.

ஈரான் ஜனாதிபதி இந்தியா பயணமானார்:
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஈரான் ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 29) பி.ப. 1.20 மணியளவில் விசேட விமானம் மூலம் புதுடில்லி புறப்பட்டுச் சென்றார்.

ஈரானிய ஜனாதிபதி தலைமையில் தெற்காசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள குழுவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், பிரதி வெளிவிவகார அமைச்சர், பெற்றோலியம் பிரதியமைச்சர், மின்சக்தி பிரதியமைச்சர் உட்பட 70 பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: