Monday, 28 April 2008

வீரவன்ஸவின் வெளியேற்றம் ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

மக்கள் விடுதலை முன்னணியில் எற்பட்டுள்ள பிணக்கு இலங்கை அரசியலில் எற்படுத்தக்கூடிய மாற்றங்களைப் பற்றி இப்போது பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சினை இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணியினதும் ஏனைய அரசியல் கட்சிகளினதும் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து தற்போது பிரிந்துள்ள அதன் பிரசார செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான விமல் வீரவன்ஸ அக்கட்சியின் ஏனைய தலைவர்களைவிட இனவாத கருத்துக்கள் உள்ளவர் என அவ்விமர்சகர்கள் கருதுகிறார்கள். வீரவன்ஸவின் செல்வாக்கின் காரணமாகவே மக்கள் விடுதலை முன்னணி இனவாத போக்கை கடைபிடித்து வந்தது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எனவே விமல் வீரவன்ஸ ம.வி.மு.வை விட்டு விலகிய பின் அக்கட்சியின் இனவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என அவர்கள் கூறுகிறார்கள்.

விமல் வீரவன்ஸவும் அவரது சகாக்களும் இன்னமும் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பூரணமாக விலகிச் செல்லவில்லை. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அக்கட்சியின் மாநாட்டுக்கு விமல் குழுவினருக்கும் அழைப்பு விடுப்பதாக ம.வி.மு. தலைவர்கள் கூறுகிறார்கள். இதாவது விமல் குழுவினர் இன்னமும் கட்சி உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள்.

ஆயினும், பிளவு நிச்சயம் என்பதும் ஏற்கனவே தெளிவாகிவிட்டது. கட்சி கொள்கைகளை மாற்றிக்கொண்டு தம்மை மீண்டும் அரவணைத்துக் கொள்ளாவிட்டால் தாம் தனிக் கட்சி அமைக்கப் போவதாக விமல் அண்மையில் தனியார் தொலைக்காட்சி யொன்றுக்குத் தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணி விமலுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றப் போவதில்லை. அவ்வாறு மாற்றிக்கொள்ளும் நிலையிருந்தால் இந்த பிணக்கே ஏற்பட்டிருக்காது.

எனவே, இரு தரப்பினரிடையே நிரந்தர பிளவு நிச்சயமாகிவிட்டது. ம.வி.மு. முக்கிய விடயங்களின் போது அதன் மத்திய குழு கூடியே தீர்மானங்களை எடுக்கிறது. அவசர பிரச்சினையாயின் மத்திய குழுவின் பிரதிநிதியாக அதன் அங்கத்தவர்களில் ஒரு சிலரைக் கொண்ட அரசியற் குழு கூடி தீர்மானங்களை எடுக்கின்றது.

இந்தக் கூட்டங்களின் போது கூடியவரை பொது இணக்கப்பாட்டின் பேரிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு முடியாத பட்சத்தில் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனவே இதுவரை ம.வி.மு. எடுத்த முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டவை அல்லது பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்களின் கருத்துப்படி எடுக்கப்பட்டவையாகும்.

விமல் வீரவன்ஸ உட்பட அவரது சகாக்களில் எத்தனை பேர் ம.வி.மு. மத்திய குழுவில் இருக்கிறார்கள் என்பதை பிறர் அறிந்து கொள்ள முடியாது. ஆயினும், மத்திய குழுவில் பெரும்பான்மையானவர்கள் விமலுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவான விடயமாகும். இல்லாவிட்டால் இந்த பிளவு ஏற்பட்டே இருக்காது. எனவே மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையிலும், நிலைப்பாடுகளிலும் கூடுதல் செல்வாக்கு செலுத்தியவர்கள் தான் இன்னமும் அதன் மத்திய குழுவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

எனவே அக்கட்சியின் கொள்கைகளிலோ அல்லது நிலைப்பாடுகளிலோ முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.

இரு குழுக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமை:

அதேவேளை, இரு குழுக்களிடையே அடிப்படை கொள்கை வித்தியாசம் இருப்பதாகவும் தெரியவில்லை. இரு குழுவினருக்கும் இடையே பாரிய கொள்கை வித்தியாசம் இருந்திருப்பின் ம.வி.மு. இவ்வளவு காலமாக வீரவன்ஸவை அதன் பிரசார செயலாளராக வைத்திருக்காது. நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் வைத்திருக்காது. இரு பிரிவினருக்கும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தீர்வில்லை. இரு பிரிவினரும் சமத்துவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள். இரு குழுக்களும் அதிகார பரவாக்கலை எதிர்க்கிறார்கள். பொருளாதார கொள்கைகளை பொறுத்தவரையிலும் இரு சாராருக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் காணக் கூடியதாக இல்லை.

அந்த வகையில் விமல் வீரவன்ஸ ம.வி.மு.விலிருந்து பிரிந்ததில் அக்கட்சிக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் எனக் கூற முடியாது. மாறாக இரு குழுக்களும் இப்போது போட்டி போட்டுக்கொண்டு பெரும்பான்மை இன மக்களை கவர முயற்சிக்கலாம். இந்தப் போட்டி இரு குழுக்களையும் மேலும் இனவாதிகளாக்கி விடலாம். விமல் வீரவன்ஸ அரசியல் ரீதியில் பிழைத்துக் கொள்வாரா என்பதும் இந்த விடயத்தில் முக்கியமானதாகும். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற முதலாவது முக்கிய உறுப்பினர் விமல் அல்ல. அக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் பலர் பிரிந்து சென்றுள்ளனர்.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், சுதந்திரக ஊடக அமைப்பின் முக்கியஸ்தர் சுனந்த தேசப்பிரிய ஆகியோர் அக்கட்சியின் ஆரம்ப தலைவர்களாவர். அவர்கள் 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின்னர் சிறைச்சாலைகளில் இருக்கும் போதே அக்கட்சியை விட்டு பிரிந்து விட்டனர். எனினும் ம.வி.மு. சிறைச்சாலைகளிலும் வெளியிலும் வளர்ந்தது. அதன் பின்னரும் அக்கட்சிக்குள் பலமுறை பிணக்குகள் எற்பட்டன. பலர் புதிய கட்சிகளை ஆரம்பிக்க முற்பட்டனர். எனினும், அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

1971ஆம் ஆண்டுக்கு முன்னரே தர்மசேகர என்பவர் ம.வி.மு.வை விட்டு விலகிச் சென்று தாய்நாட்டு பாதுகாப்புச் சங்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அது சுமார் 5 ஆண்டு காலம் மட்டுமே வளர்ந்தது. பின்னர் 1977ஆம் ஆண்டு ரோஹன விஜேவீர உட்பட ம.வி.மு. தலைவர்கள் சிறைகளில் இருந்து விடுதலையான பின்னர் பிரிந்து சென்ற மற்றொரு குழுவினர் ஜனதா சங்கமய என்ற பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர். அதுவும் சுமார் இரண்டாண்டு காலமே சீவித்தது.

பின்னர் தற்போது அமைச்சராகவிருக்கும் மஹிந்த விஜேசேகர புதிய மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்தார். அது சில மாதங்களே வாழ்ந்தது. மஹிந்த விஜேசேகர 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட 41 பேரில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு பார்க்கும்போது விமல் வீரவன்ஸ ஆரம்பிக்கப் போகும் புதிய கட்சி நிலைத்திருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிலவேளை, வீரவன்ஸவின் அரசியல் இத்தோடு முடிவடைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அவர் மக்கள் ஆதரவு கிடைக்காவிட்டால் பிரதான இரண்டு கட்சிகளும் அவரை புறக்கணித்துவிடும். சிலவேளை, அவர் விரைவிலேயே அரசாங்கத்தில் சேரக்கூடும். அதன் மூலம் அவர் தனிப்பட்ட முறையில் கரை சேர்ந்து விட்டாலும் அவரது அரசியல் மக்கள் விடுதலை முன்னணியை கொள்கை ரீதியாக பாதிக்க இடமில்லை.

விமல் அமைக்கப்போகும் அரசியல் கட்சி பலம்வாய்ந்ததாக வளர்ந்தால் நிச்சயமாக அது மக்கள் விடுதலை முன்னணியை விடவும் இனவாதக் கட்சியாகவே இருக்கும். எனவே மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக அவ்விரு கட்சிகளுக்கிடையே கொள்கைப் போட்டி இடம்பெறலாம். இரு சாராரும் போட்டி போட்டுக்கொண்டு சிங்கள மக்களை அணுகலாம்.

இது இரு சாராரையும் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளும். விமல் வீரவன்ஸ எதிர்காலத்தில் பலமான அரசியல்வாதியாக எழுந்து வருவாரா என்பதிலேயே இது தங்கியுள்ளது.

No comments: