Wednesday, 30 April 2008

கருணா தரப்பு பிளவுபட்டச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட பல ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் இளைஞர்கள் வசம் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உருவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிராசார நடவடிக்கைகளின் போது முஸ்லிம் கடும்போக்கு மற்றும் முஸ்லிம் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

லங்கா டிசெண்ட் இணையதளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.




பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர் மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் பெருவாரியாக இவ்வாறான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

குறித்த பிரதேசங்களில் சிங்கள எதிர்ப்பு கருத்துக்களையும், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

மேலும், தனி முஸ்லிம் இராச்சியம் என்ற எண்ணக்கருவை கிழக்கு முஸ்லிம்களின் இதயங்களில் ஆழமாக விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் முயற்சிப்பதாக நிசாந்த குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தை தனி முஸ்லிம் பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1960-70களில் தமிழர் விடுதலைக் கூட்டணி எவ்வாறு வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்ததோ அவ்வாறே ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் இனவாத கருத்துக்களை வியாபிக்க முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

இந்த நிலைமையின் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கக்கூடிய ஓர் அபாய நிலை தோன்றியுள்ளதாக அந்தக் கட்சி மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பௌத்த விஹாரைகளை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை எதிர்காலத்தில் அல் கய்தா தீவிரவாத செயற்பாடுகள் கிழக்கில் வியாபிக்க வழிகோலும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்களுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

கருணா தரப்பு பிளவுபட்டச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட பல ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் இளைஞர்கள் வசம் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

எதிர்காலத்தில் ஆயுதந்தரித்த முஸ்லிம் இளைஞர்கள் தனி முஸ்லிம் இராச்சியமொன்றை கோரக்கூடிய அபாயம் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments: