Wednesday, 30 April 2008

மகிந்தவுக்கு மே தினம் கொண்டாடும் யோக்கியதை உண்டா ?

த. மனோகரன்

மே தினம் அதாவது தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகின்றது. உழைக்கும் மக்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இன, மத, மொழி, நாடு போன்ற சகல வேறுபாடுகளையும் கடந்ததாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை ஓங்கிப் பறைசாற்றும் எழுச்சி தினமாக இந்நாள் கருதப்படுகின்றது.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்நாள் நமது நாட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரத்தான் செய்கின்றது. ஆனால், அதன் அடிப்படைக் கோட்பாடு மட்டும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு அதன் மேல் நின்று ஆர்ப்பரிப்பு செய்யப்படுகின்றது என்றால் அதுவே உண்மையாகும்.

ஆம், இலங்கையில் மேதினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியை, எழுச்சியைக் காட்டும் தினமாகவன்றி அரசியல் கட்சிகளின் ஆள்திரட்டும் ஆற்றலை, செல்வாக்கைக் காட்டும் ஒரு அரசியல் நிகழ்வாகவே தொடர்ந்து வருவது பற்றி கூறித் தான் ஆகவேண்டும்.

அது மட்டுமல்ல, இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலே தொழிலாளர் என்ற வர்க்க உணர்வு மழுங்கி இனவாத உணர்வு மேலோங்கி வெளிப்படுவது யதார்த்தமாயுள்ளது.

1956 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் தினமான மேதினம் இந்நாட்டில் அரச அங்கீகாராம் பெற்ற விடுமுறை தினமாகவும் பிரகடனப் படுத்தப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் மதிப்பை மேம்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதே ஆண்டில் தான் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச துறையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அரச கரும மொழித் தேர்ச்சியின்மையால் தொழில் இழக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கியத்தின், உரிமையின் கறைபடிந்த ஆண்டாக அமைந்துவிட்டது என்பது வரலாற்றின் ஒரு பக்கமாகும்.

தொழிலாளர் ஐக்கியம், வர்க்கம் பற்றிக் குரலெழுப்பும் இலங்கையிலுள்ள எத்தனை தொழிற் சங்கங்கள் அரசதுறையிலிருந்த தமிழ்த் தொழிலாளர் வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்தன. தொழிலாளர் வர்க்க உணர்வை விட இன, மொழி பாகுபாடுகளுக்குத் துணை போனவை எவ்வாறு வர்க்க ஒற்றுமைபற்றிய உணர்வு பூர்வமான தினத்தை கொண்டாடும் யோக்கியதை உள்ளன ?

இந்நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தில் மிகப் பெரும்பான்மையினர் பெருந் தோட்டங்களில் தொழில் செய்யும் நாளந்த கூலித் தொழிலாளர்கள் அவர்கள் படும் துன்பங்கள், துயரங்கள் தொடர்பாக நாட்டிலுள்ள எத்தனை தொழிற் சங்கங்கள் குரல் கொடுத்தன, குரல் கொடுக்கின்றன.

குறைந்த ஊதியத்திற்கு அடிப்படை வசதிகளற்ற நிலையில் அவதியுறும் பெருந் தோட்டத் துறைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்களென்பதாலா இவ்வாறான பாராமுகம் ?

நாட்டில் நிலவும் சூழ்நிலையால் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியாது அகதி வாழ்வு வாழும் விவசாயத் தொழிலாளர்கள் பற்றியோ, கடலை நம்பி வாழ்ந்து இன்று கடற்றொழில் பற்றியோ சிந்திக்காது உரிமைதினமாக, ஒற்றுமை தினமாக மேதினம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.

தொழில் செய்வோரை இன, மத, மொழி வேறுபாடின்றி அரவனைத்து உயர்த்தும் போது தான் இத் தினத்தின் நோக்கம் உறுதிப்படுத்தப்படும். தமது செல்வாக்கை வெளிப்படுத்த அரசியல் சக்தியை உறுதிப்படுத்த நடத்தப்படும் மேதினக் கொண்டாட்டங்கள் பயனற்றவை, வெறும் பகட்டானவை.

தொழிலாளர் தினத்தில் இவை பற்றியும் சிந்திப்பது சிறப்பாயமையும். வெறும் அறிக்கைகள், மேடைமுழக்கங்கள், ஊர்வலங்கள் தொழிலாளர் தேவைகளை நிறைவு செய்யாது. சிந்திப்பார்களா?

No comments: