மறைந்த ஊடகவியலாளர்களான தர்மரட்ணம் சிவராம் மற்றும் செல்வராசா ரஜுவர்மன் ஆகியோரது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனை முன்னிட்டு நெல்லியடி பரமானந்தா ஆசிரமத்திலுள்ள அநாதை குழந்தைகளிற்கும், ஆதரவற்ற முதியவர்களிற்கும் மதிய விருந்தொன்றை வட இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருந்தது. அத்துடன் மறைந்த ஊடகவியலாளர்களது நினைவாக அன்பளிப்பு பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கிவரும் சூழ்நிலையிலும் ஊடக சுதந்திரத்துக்கு குரல்கொடுப்பதுடன், உலகளாவிய ரீதியில் ஊடகவியல் நண்பர்கள் அனைவரும் இந்த நோக்கத்துக்காக எம்முடன் ஒன்றிணைய வேண்டுமென வட இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் அச்சம் கலந்த சூழ்நிலையானது ஊடகப் பணியாளர்களின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடையாக அமைந்திருப்பதுடன், இதனால் பல ஊடகவியலாளர்கள் தமது தொழிலைக் கைவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
“இந்த ஊடக நண்பர்கள் ஊடகத்துறைக்கு இறக்கும்வரை ஆற்றிய பணியை இந்த நாளில் நாங்கள் நினைவு கூறுகின்றோம். ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் அவர்கள் ஊடகத்துறைக்கு ஆற்றிய பணியை மறப்பதற்கு நாங்கள் தயாரில்லை” என வட இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கூறியுள்ளது.
இதேவேளை, பரமானந்தா ஆசிரமத்திலுள்ள சிறுவர் நூலகத்திற்கான ஒரு தொகுதி கல்வி நூல்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வட இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment