Tuesday 29 April 2008

அனுர பண்டாரநாயக்கவின் சொத்து விவகாரம் நீதிமன்றில்...சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை..

அமரர் அனுர பண்டாரநாயக்கவினது உயிலின் அடிப்படையில் சொத்துக்களின் உரிமை தொடர்பாக நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள உத்தேசித்திருப்பதாக ஐ.தே.க.வின் மேல் மாகாணசபை உறுப்பினர் காமினி குணரத்ன லங்கா டிசெண்டிற்கு தெரிவித்துள்ளார்.

முருகேசு மற்றும் நீலகாந்தன் சட்ட நிறுவனத்தின் மூலம் 1996ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி கையொப்பமிடப்பட்ட உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரில் காமினி குணரத்னவின் பெயரும் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது.

காமினி குணரத்னவைத் தவிர கோடீஸ்வர வர்த்தகர்கரும் அமரர் அனுரவின் நெருங்கிய நண்பருமான திருக்குமரன் நடேசன், சட்டத்தரணி சானக லெவ்ரா, தனிப்பட்ட செயலாளர் உனேஸ் ஹபீல் ஆகியோரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு அனுர பண்டாரநாயக்கவினால் எழுதப்பட்ட உயிலின் அடிப்படையில் அவரது சகோதரிகளான சுனேத்ரா பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை.

இந்த உயிலின் அடிப்படையில் 22 ஏக்கர் கொண்ட ஹொரகொல்ல காணி பண்டாரநாயக்க அமைப்பிற்கும், ஏனைய சொத்துக்கள் பலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

101 பர்சஸ் உடைய கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடு பண்டாரநாயக்க அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அனுர பண்டாரநாயக்கவின் சொத்துக்கள் அவரது ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களது பெயரில் எழுதப்பட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான வாகனமொன்று அமைச்சர் மேர்வின் சில்வாவின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்காவில் வைத்து அனுர பண்டாரநயாக்க மற்றுமொரு உயிலை எழுதியுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த போதிலும், அவ்வாறானதொரு உயில் தொடர்பாக இதுவரையில் வெளியிடப்படவில்லை என காமினி குணரத்ன தெரிவித்தார்.

இந்த நிலைமையின் கீழ் உயில் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், குறித்த உயிலுக்கு மேலதிகமாக வேறும் உயில்கள் காணப்பட்டால் நீதிமன்றில் நிரூபிக்க முடியும் எனவும் காமினி குணரத்ன தெரிவித்துள்ளார்.

No comments: