மோசமடைந்திருக்கும் மனித உரிமைகளின் பின்னணியில் காணப்படும் விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துவந்தால் முன்னுரிமை சலுகை முறையை (GSP+) இழக்கவேண்டி ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவினர் கடந்த சில நாட்களாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களைச் சந்தித்த பின்னரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அரசாங்கத்தின் கடும்போக்கான நிலைப்பாடானது இலங்கைக்கு வழங்கப்படும் முன்னுரிமை சலுகை முறையை இழப்பதற்கு காரணமாக அமைந்துவிடும்” என பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை விடயங்கள் உள்ளிட்ட விடயங்களைக் கண்காணித்து தகவல்களைத் திரட்டும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளமை இங்கு முக்கியம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment