Tuesday 29 April 2008

நிலவரம் ஏட்டுக்காக சண் தவராஜா எழுதிய - 'சிவராம் - 'மறக்க முடியாத (ஊடக) முன்னோடி"

ஈழத் தமிழ்த் தேசியமானது ஒரு குறுகிய கால இடைவெளியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. புரட்சி எனப்படுவதே வரலாற்றில் பாய்ச்சலை ஏற்படுத்துவது தான். அந்த வகையில் எமது போராட்டமும் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏற்கனவே இருந்த பல சாதனைகளை முறியடித்திருக்கின்றது. பழைய சாதனைகளை நினைவுபடுத்தியிருக்கின்றது. செழுமைப்படுத்தி இருக்கின்றது. அவற்றுக்கூடாத மக்கள் மத்தியிலே உத்வேகத்தையும் உணர்வையும் ஊட்டியிருக்கின்றது.

மக்களே வரலாறைப் படைப்பவர்கள் என்பது பொதுநியதியான போதிலும் அதற்கு வித்திடுபவர்கள் தனி மனிதர்களே. இத்தகையோர் சாதனையாளர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் வாழுகின்ற சூழல், அவர்கள் பெற்ற கல்வி, அனுபவ அறிவு, வாய்த்த நண்பர்கள் பெற்றோர், சகோதரர்கள், சுற்றம் எனப் பல்வேறு காரணிகள் அவர்கள் சாதனையைப் படைப்பதற்கான விதைகளாகின்றன.

சாதனையாளர்கள் பலருக்;கு முன்னோடிகள் அல்லது வழிகாட்டிகள் கிடைத்து விடுகின்றார்கள். ஒரு சிலருக்கோ முன்னோடிகள் கிடைப்பதில்லை. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாமனிதர் டி.சிவராம்.

செல்வந்தக் குடும்பமொன்றில் பிறந்து கற்றோர் சமூகப் பின்னணியில் வளர்ந்த சிவராம் ஒரு இலக்கிய ஆர்வலராகவே பொது வாழ்வில் அறிமுகமானார். மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவராக விளங்கி, இடதுசாரிச் சிந்தனை கொண்ட படைப்பாளிகள் பலருடன் பழகியதில் கிடைத்த அனுபவமே பின்னாளில் அவர் அரசியலில் ஈடுபடவும், விஞ்ஞான பூர்வமான விமர்சனப் பாணியூடாக விடயங்களை அணுகும் போக்கிலான எழுத்துக்களைப் படைக்கவும், சமூகப் பிரக்ஞையுடன் வாழ்ந்து தனது சமூகத்தின் நல வாழ்வுக்காக உயிரைத் தியாகம் செய்யவும் வித்திட்டிருக்கலாம் எனலாம்.

ஈழத்திலும் சரி, தென்னிலங்கையிலும் சரி வாழ்ந்த, தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் தேசிய உணர்வும், தேசிய விடுதலை உணர்வும் உடையவர்களாக இருந்த போதிலும் விடுதலையை நோக்கிய பயணத்தில் தமது எழுத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாமலும் ஊடகப் பலத்தைக் கொண்டு சமூகத்துக்கு அறிவூட்டி திசைகாட்டும் வழி தெரியாமலும் இருந்தனர். ஆனால், சிவராம் ஒருவரே இரண்டையும் சரியாக உணர்ந்து கலந்து பயன்படுத்தினார். தான் மட்டுமன்றி தன் சகாக்களையும் அந்தத் திசை வழியில் அழைத்துச் சென்றார். அதற்கூடாக புதிய செல்நெறியைப் படைத்தார்.

'ஊடகவியலாளன் என்பவன் அரசியல்வாதிகளையும் பிரமுகர்களையும் சார்ந்தே செயற்பட வேண்டியவன். இது தவிர்க்க முடியாத ஒரு நியதி. செய்தி என்பது பேச்சுக்களும் நடைபெற்ற சம்பவங்களுமே" என்ற மாயைக்குள் ஊடகவியலாளர் அநேகர் சிக்குண்டு கிடந்த காலப் பகுதியிலேயே சிவராம் ஊடகத்துறையில் பிரவேசித்தார்.

விடுதலையின்பால் கொண்ட வேட்கையின் காரணமாக போராட்ட இயக்கமொன்றில் இணைந்து, சுய அறிவை இழந்து, சூழ்நிலையின் கைதியாக மாறி, மனச்சாட்சியைத் தொலைத்து விட்டுச் செயற்பட்டு, மீண்டும் சுய உணர்வு பெற்ற நாட்களிலேயே சிவராம் ஊடகத்துறையில் பிரவேசித்தார். தனது கடந்த காலம் தொடர்பில் சிவராம் சுய விமர்சனம் செய்து கொள்ளவில்லை. ஆயினும் அது தொடர்பான கசப்பு அவர் செயல்களில் இறுதிவரை விரவி இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

பேரினவாத்தின் சூழ்ச்சிக்கு நம்மையறியாமலேயே எப்படிப் பலியாகுவது என்பதை சுய அனுபவத்தினூடாகத் தெரிந்து வைத்திருந்த சிவராம், ஊடகவியலாளர்களை சுயமரியாதை கொண்டவர்களாக மாற்றியமைப்பதில் வெற்றி கண்டார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், வட இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் என சிவராமின் பங்களிப்பும் ஆலோசனை வழிகாட்டலும் இல்லாத தமிழ் ஊடக அமைப்புகள் இல்லையெனும் அளவிற்கு அவரின் பங்களிப்பும் வழிகாட்டலும் இருந்தது.

ஈழத் தமிழரிடையே ஆங்கிலப் புலமை கொண்ட பல ஊடகவியலாளர்கள் எம்மிடையே காலங்காலமாக இருந்து வந்த போதிலும் சிவராமின் எழுத்துக்களோ எழுத்துத்துறையில் ஒரு புரட்சிகர ஆரம்பத்தையும் எழுத்துலகில் புதியதொரு செல்நெறியையும் தோற்றுவித்தது. பத்தி எழுத்துக்களோடு மாத்திரம் தனது பணியை மட்டுப்படுத்தவிடாத அவர் அதற்கும் அப்பால் சென்று இராணுவ ஆய்வாளர் என்ற கோதாவில் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பொது மன்றங்களிலும் பல ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக வாசற்படியை மிதித்த அவர் பட்டப்படிப்பை முடிக்காத போதும் பட்டப்படிப்பை முடித்த எத்தனையோ பேருக்குக் கிட்டாத வாய்ப்புக்கள் அவரின் திறமைக்கும், அர்ப்பணிப்புக்கும், சேவைக்கும் கிடைத்தன.

இதற்கும் அப்பால் அவரால் ஆரம்பிக்கப்பட் செய்தி நிறுவனமான தமிழ்நெட் இன்று சர்வதேச அளவில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பிலான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளக்கூடிய நம்பிக்கைக்குரிய நிறுவனமாக வளர்ச்சி கண்டு நிற்கின்றது. வெளிநாட்டு அரசாங்கங்களும், புலனாய்வு நிறுவனங்களும், ஏன் சில வேளைகளில் சிறிலங்கா அரசு கூட தமிழ்நெட்டைப் பார்த்தே செய்திகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு அதன் சேவை மிகக்குறுகிய காலத்தில் உயர்ந்துள்ளமை சிவராமின் திறமைக்கும் தீர்க்க தரிசனத்துக்குமான ஒரு சான்றாகும்.

தமிழ்நெட் இணையச் சேவைக்குப் புறம்பாக ழேசவா நுயளவநசn ர்நசயடன என்ற பெயரில் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றும் சிவராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிலங்காவில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகள் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவதுடன், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டும், திரித்துக் கூறியும் பேரினவாதத்துக்குத் துணைபோகும் நிலையில், சிறிலங்காவில் நிலைகொண்டுள்ள இராசதந்திரிகளும் உண்மைகளை அறிந்து கொள்ள விரும்பும் சிங்களவர்களும் கருத்துத் தெளிவைப் பெறுவதற்கு உதவும் நோக்கில் வெளிவந்த இப்பத்திரிகை ஒரு வருடத்துக்கு மேல் வெளிவராமல் போனமை துரதிர்ஸ்டமே.

சிவராம் அவர்கள் எழுதுகின்ற பாணி அலாதியானது. தமிழானாலும் ஆங்கிலம் ஆனாலும் சரளமான சொல்லாடலுடனும், சீரான வேகத்துடனும் எழுதும் அவரைப் பொறுத்தவரை மற்றையவருக்குச் சிறியதாகத் தெரியும் விடயத்தைக்கூட மெருகுபடுத்தி, கருத்துச் செழுமையுடன், கவர்ச்சிகரமாக வெளியிடத் தெரிந்திருந்தது. ஒரு இடத்தைக் குறிப்பிட்டு எழுதும் போது கூட அந்த இடத்தின் கேந்திர அமைவிடம், அதன் பண்டைய சிறப்பு, அங்கே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், மக்கள் இலக்கியம், உணவுப் பழக்க வழக்கம், வழக்காறு என உபரித் தகவல்களை வழங்குவதனூடாக வாசகரைத் தன் எழுத்தின்பால் ஈர்க்கும் உத்தி அவருக்குக் கைவந்த கலை.

மீள்கட்டவிழ்ப்பு வாத அடிப்படையில் இயங்கியல் சார்ந்த அவரின் எழுத்துக்கள் தான் கூற விரும்பும் எந்தவொரு கருத்தையும் அலசி ஆராய்வதாக இருப்பதுடன் இறுதியில் தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்தோட்டத்துடன் அவற்றை இணைப்பதில் போய் முடியும்.

சிவராமின் சமூகப் பிரக்ஞைக்கும் பல்வேறு எடுத்துக் காட்டுக்களைக்கூற முடியும். தனது ஊடக சகாக்களை நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளுமாறு சதா வலியுறுத்தும் அவர் போராளிகளுக்கும் பல விடயங்களைக் கற்றுத் தந்தார். மக்கள் போராட்டத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அவர் போராட்டத்தின் உந்து சக்தியான மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். தன்னால் இயலுமான வரை பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறும் சிவராம் தனது சகாக்களையும் அந்தத் திசையில் பயணிக்கச் செய்தார்.

தமிழ்மக்களின் அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனைகளுள் ஒன்றான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதயமானது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வேயானாலும் அதனை உருவாக்கி, தளம் அமைத்து, நெறிப்படுத்தி, உத்வேகப்படுத்தியதில் சிவராமின் பங்கு அளப்பரியது.

தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் மட்டக்களப்பில் உருவாக்கி வைத்த தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்துடன் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வழிகோலியது.

கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதபடி எதிரிகளாகக் கணிக்கப்பட்டோரை, பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி, புரிந்துணர்வை ஏற்படுத்தி, பொது வேலைத் திட்டமொன்றை உருவாக்கியதில் சிவராமின் பங்கு இன்றியமையாதது. அவர் ஒரு போதும் ஆலோசனை கூறுவதுடன் மாத்திரம் நின்றுவிடுவதில்லை. ஏனையோரை இயக்குபவராக விளங்குகின்ற வேளையிலும் கூட தானே ஒரு இயக்கு பொருளாகவும் அவர் விளங்கினார்.

படித்துப் பட்டம் பெற்றவர்களே சான்றோர்கள் என்ற கணிப்பு நிலவிய சமூகத்தில் சிவராமும் ஒரு சான்றோராகக் கருதப்படக் காரணம் பரந்த வீச்செல்லையைக் கொண்ட அவரின் வாசிப்பே. தேடலின் உச்சம் எனக்கூறும் அளவிற்கு அநேகமாக சகல துறைகளையும் தழுவியதாக அவரது வாசிப்பின் வீச்செல்லை விளங்கியது.

அவரது இந்தப் பரந்த அறிவே எதிரிகள் மத்தியிலும் அவருக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுவே அவரது உயிரை ஒரு குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றியும் வந்தது எனக்கூறினாலும் அது மிகையாகாது.

ஊடகத்துறையில் கால் பதித்த நாள் முதல் அவர் கொலையான அந்தக் கணம் வரையும் தனது கொள்கைகளையும், சுயமரியாதையையும் சமரசம் செய்து கொள்ளாத அந்த இயல்பு உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம்.

'வாழ்நாளில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்த தருணங்களுள் உன்னதமானது தேசியத் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய அந்தக் கணப்பொழுதே" என ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் விபரித்த வேளையில் அவர் கண்ணில் மின்னிய பரவசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

மகிழ்ச்சியாக இருக்கும் வேளைகளில் நாம் குழுவாகப் பாடும் பாடல், 'தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?..... உரிமை இழந்தோம், உடமை இழந்தோம், உணர்வை இழக்கலாமா?" என்பது. தனது கட்டைக் குரலால் ஒரே வரியையே திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருப்பார்.

அவர் மிகவும் விரும்பிய அந்தப் பாடலுக்கு ஏற்ப தனது இன உணர்வை, சுய மரியாதையை இறுதிவரை விட்டுக்கொடுக்காத நிலையில் இரண்டகர்களால் கொல்லப்பட்ட சிவராம் உண்மையில் ஒரு மாமனிதனே! ஊடகத்துறையில் கால்பதித்த நாள் முதல் அவர் கொலையான அந்தக் கணம் வரையும் தனது கொள்கையையும் சுயமரியாதையும் சமரசம் செய்து கொள்ளாத அந்த இயல்பு உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம்.

வாழ்நாளில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்த தருணங்களில் உன்னதனமானது தேசியத் தலைவரைச் சந்தித்து உரையாடிய அந்தக் கணப்பொழுதே என அவர் விபரித்த வேளையில் அவர் கண்ணில் மின்னிய ஒளிக்கீற்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

மகிழ்ச்சியாக இருக்கும் வேளைகளில் நாம் குழுவாகப் பாடும் பாடல் தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..... உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா? என்பதே. தனது இன உணர்வு சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத நிலையில் இரண்டகர்களால் கொல்லப்பட்ட சிவராம் உண்மையில் ஒரு மாமனிதனே.

No comments: