விமல் வீரவன்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது பற்றி எந்தவிதமான கவலையும் இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அவ்வாறு புதிய கட்சியொன்று உருவாக்கப்படுமாயின் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏனையவர்களின் கட்சி உறுப்புரிமை இல்லாமல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
நந்தன குணத்திலகவுடனோ அல்லது கமல் தேசப்பிரியவுடனோ இணைந்து செயற்படுவதற்கு விமல்வீரவன்சவுக்கு சுதந்திரம் உள்ளது என இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
கட்சியின் பிரசார செயலாளராக விமல் வீரவன்சவை கட்சி தொடர்ந்தும் கருதிவருகின்ற போதும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கு தற்பொழுது எதிர்ப்புத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என ரில்வின் சில்வா தெரிவித்தார்.
“விமல் தனது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளார். எனவே, அவரைத் தொடர்புகொள்வதற்கு வழியில்லை. அவரைச் சென்று எம்மால் சந்திக்கமுடியாதுள்ளது, ஏனெனில் அவர் எங்கு வாழ்கிறார் என்பது தெரியாதுள்ளது. பெல்வத்தவிலுள்ள கட்சியின் தலைமையகம் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது” என ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
எதிர்வரும் மே 1ஆம் திகதிக்கு முன்னர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த ஜே.வி.பி.யின் தலைமைப்பீடம் முன்வராவிட்டால் புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்தப் போவதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச நேற்று அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment