Wednesday 30 April 2008

சமாதானத்துக்கான ஆதரவு மக்கள் மத்தியில் குறைவடைந்துள்ளது- ஆய்வின் முடிவு

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு சிங்களவர்களின் ஆதரவு தொடர்ந்தும் அதிகரித்திருப்பதுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. 2008 மார்ச் மாதத்தின் சமாதான நம்பிக்கைச் சுட்டெண்ணுக்கு அமைய சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஆதரவு 16.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்திவரும் கணக்கெடுப்பில் மார்ச் மாதத்துக்கான கணக்கெடுப்பிலேயே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல், வெளிநாடுகளின் தலையீடுகள், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வுக்குச் சாத்தியமான காரணிகள் போன்றன இந்தச் சுட்டெண்ணில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

தற்பொழுது நிலவிவரும் பிரச்சினை அரசியல் ரீதியாக முடிவுக்குக்கொண்டுவரப்படுமென சிறுபான்மை இனத்தவர்களே கூறியுள்ளனர். எனினும், பெரும்பான்மையான சிங்களவர்களில் 32.2 வீதமானவர்கள் இந்தக் கருத்துடன் இணங்கவில்லை. மோதல்களின் பின்னரே அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன், இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு பிரச்சினையைத் தீர்க்குமா என்ற கேள்விக்கும் குறைந்தளவானவர்களே சாதகமாகப் பதிலளித்துள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை ஏற்றது அல்ல என மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் கூறியுள்ளபோதும், சிங்கள மக்கள் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிங்களவர்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் காணப்படும் பிரபல்யத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்பதும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தால் நடத்தப்படும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

No comments: