Sunday 27 April 2008

முகமாலை சமரில் வெளிப்படாத தகவல்கள்: "லக்பிம"

வட போர்முனையான முகமாலை களமுனையில் நடைபெற்ற சமரின் போது சிறிலங்காப் படையினர் சந்தித்த பேரழிவு தொடர்பான தகவல்களை கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தனது பாதுகாப்புப் பத்தியில் விரிவாக தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:
அரசின் பிரச்சாரப் போர் அதிக காலம் நீடிக்காது என்பதற்கான தீர்க்கமான ஆதாரம் வட போர்முனையில் நடந்த பயங்கர சமராகும்.
கடந்த புதன்கிழமை வட போர்முனையில் நடைபெற்ற சமர் மூலம் வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.
வட போர்முனையில் படையினர் சந்தித்த மூன்றாவது பேரழிவு இதுவாகும்.
முன்னைய சமர்களில் படையினர் பெற்ற அனுபவங்கள் மிகக்குறைந்த பலனையே அவர்களுக்கு கொடுத்துள்ளது. முகமாலையில் நடைபெற்ற சமரை வெற்றியான சமராக சித்தரிக்க அரசு மேலதிக நேரம் எடுத்து வேலை செய்துகொண்டிருக்கையில் 100-க்கும் அதிகமான படையினர் தமது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிறிலங்கா இராணுவத்தின் இளைஞர்கள் தமது உயிரையும், அவையவங்களையும் இழந்திருந்தனர்.
முகமாலை களத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக மக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அரசு இதனை மூடிமறைக்க முற்பட்டது அதனை மேலும் மோசமாக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத்தளங்களும், அனைத்துலக ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இழப்புக்கள் தொடர்பாக அரசு தெரிவித்ததனை விட மிகவும் அதிகமான தகவல்களை வெளியிட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை விடிந்து இரு மணிநேரம் கடந்த நிலையில் படையினர் தமது நடவடிக்கையை தொடங்கினர்.
போர் வலிமையுடைய 55 மற்றும் 53 ஆவது படையணிகளைச் சேர்ந்த இராணுவத்தினர் கிளாலி - முகமாலை நிலைகளில் இருந்து நகர்வை தொடங்கினர்.
படையினரின் முன்னணி அரண்கள் மேற்கில் கிளாலி - எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து கிழக்கே நாகர்கோவில் வரையில் அமைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் படையினரின் நிலைகளில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சமாந்தரமாக அமைந்துள்ளன.
இருளின் உதவியுடன் படையினர் விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களை நோக்கி நகர்ந்தனர். எனினும் முகமாலைக்கு தென்புறமாக நகர்ந்த 53 ஆவது படையணியின் நகர்வு, மிதிவெடிகள்- பொறிவெடிகளால் தாமதமாகியது. 55 ஆவது படையணியின் நகர்வு அதிகம் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.
முகமாலைக்கு வடக்காக நகர்ந்த இந்த படையணி விடுதலைப் புலிகளின் முன்னனி அரண்களை கைப்பற்றியது.
காலை 6:00 மணியளவில் கைப்பற்றப்பட்ட இந்த அரண்களை 55 ஆவது படையணி பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக இடைநிலை இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் முற்பகல் 9.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடங்கின.
பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணைகள் மழைபோல வீழந்து வெடிக்க ஆரம்பித்தன. இது முன்நகர்ந்த படையினருக்கான உதவிகள் சென்றடைவதனை தடுத்திருந்தன.
மேலும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அவர்களின் வரைபடத்தில் உள்ளவை. அவற்றின் மீது அவர்களால் மிகவும் துல்லியமாக எறிகணைகளை ஏவ முடியும்.
விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி நிலைகள் மீது படையினர் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்திய போதும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் ஓயவில்லை. கடுமையான இந்தச் சமரின் போது 53 ஆவது படையணியைச் சேர்ந்த கஜபா மற்றும் விஜயபா இலகு காலாட் றெஜிமென்ட் படையினர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் மேலதிகமாக ஊடுருவி விட்டனர்.
கடந்த பல மாதங்களாக விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்கள் மீது படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வந்ததனால் விடுதலைப் புலிகள் தமது இரண்டாவது பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தியிருந்ததுடன், கவசப் படையணியின் வாகனங்களை கைப்பற்றுவதற்கான பொறிக்கிடங்குகளையும் அமைத்திருந்தனர்.
கிளாலிப் பகுதியில் நகர்ந்த இராணுவத்தினர் மீது படகில் பொருத்தப்பட்ட 0.50 கலிபர் கனரக துப்பாக்கிகளினாலும் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகள் சார்பு இணையத்தளங்கள் வெளியிட்ட படங்களில் இராணுவத்தினர் பதுங்கு குழிகளில் வீழந்து கிடக்கும் காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
முன்னணி நிலைகளுக்கு நகர்ந்த படையினருக்கான விநியோகங்கள் பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களினால் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்த தாக்குதலில் சிக்கிய பல இராணுவத்தினர் களத்தின் நடுவில் வீழந்தனர். இந்த நிலையில் இராணுவத்தினர் வான் தாக்குதல் ஆதரவை கோரியிருந்தனர்.
எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள், தாக்குதல் வானூர்திகள் விடுதலைப் புலிகளின் மோட்டார் நிலைகள் மீது தாக்குதலை நடத்தின.
ஆனால் 81 மி.மீ, 60 மி.மீ. எறிகணைகள் தொடர்ச்சியாக வீழந்து வெடிக்கத் தொடங்கின. விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளுக்கள் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது ஜீப் வண்டிகளில் பொருத்தப்பட்ட பின்னுதைப்பற்ற பீரங்கிகள் மூலமும் விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
இராணுவத்தரப்பின் தகவல்களின் படி விடுதலைப் புலிகள் 80 இடங்களில் இருந்து மோட்டர்கள் மற்றும் பீரங்கி எறிகணைகளை ஏவியிருந்தனர். அவர்கள் விரைவாக மோட்டார் மற்றும் பீரங்கிகளை நகர்த்தி தாக்குதல்களை மேற்கொண்டது படையினரின் எதிர்த்தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றியிருந்தது.
பிற்பகல் 1:00 மணியளவில் தாக்குதல் தீவிரமடைந்தது, படையினர் பெரும் அழிவுகளைச் சந்தித்தனர். அவர்களுக்கான விநியோகங்களும் முடக்கப்பட்டிருந்தன. இராணுவத்தினாரிடம் இருந்த வெடிபொருட்களும் தீர்ந்து போகும் நிலையை அடைந்திருந்தது.
இந்த நிலையில் படையினர் பின்வாங்கும் முடிவை எடுத்திருந்தனர். அப்போது காயமடைந்த அதிகளவான படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்படுவதற்காக காத்திருந்தனர். எனவே இராணுவத்தினர் தமது உயிரிழந்த சகாக்களை கைவிட்டுச் செல்லும் நிலையை அடைந்திருந்தனர்.
பின்னர் தமது தரப்பில் 38 பேர் காணாமல் போனதாக படையினர் அறிவித்திருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளால் 28 சடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. 5 சடலங்களை படையினர் பின்னர் கண்டெடுத்திருந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னர் அரசு அதனை மூடிமறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. முதலில் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலையே தாம் முறியடித்ததாக படையினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் அதனை சிலரே நம்பினர்.
எனவே அதன் பின்னர் படையினரின் தகவல்களில் மேலும் சில வரிகள் சேர்க்கப்பட்டன. அதாவது விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்துவதாக அறிந்த படையினர் முன்நகர்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் பின்னர் படைத்தரப்பு தமது தரப்பில் 43 பேர் பலியானதாகவும், 120 பேர் காயமடைந்ததாகவும், 30 பேர் காணாமல் போனதாகவும் தெரிவித்திருந்தனர். எமக்கு கிடைத்த தகவல்களின் படி 370 பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் 174 பேர் படுகாயமடைந்துள்ளனர். 169 பேர் கொழும்புக்கு வானூர்தி மூலம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
117 இராணுவத்தினரும் அதிகாரிகளும் ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
32 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2:00 மணிக்கு தாக்குதலை நடத்திய இளம் படை அதிகாரி ஒருவர் தாம் முன்நகர்ந்த போது பதுங்கு குழியில் இருந்த இரு பெண் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதுங்குகுழியின் மீது கையெறிகுண்டை எறிவதற்கு தயாராக அதன் பாதுகாப்பு ஊசிகளை தாம் அகற்றிய சமயம் 81 மி.மீ எறிகணைகள் தமக்கு அருகில் வீழந்து வெடித்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் அந்த அதிகாரியின் கை துண்டிக்கப்பட்டதுடன் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலுக்கு முதல் நாள் நடைபெற்ற மோதலில் படையினர் இலகு காலாட்படை தாக்குதல் வாகனம் ஒன்றையும் இழந்திருந்தனர். இந்த வாகனம் ஆர்பிஜி மூலம் தாக்கப்பட்டதாகவும், அதில் இருந்த 4 படையினர் காயமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: