Wednesday, 30 April 2008

17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறேன் என்னை விடுதலை செய்யவேண்டும் ஐகோர்ட்டில் நளினி மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் என்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

பிரியங்கா சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினி (வயது 37) வேலூர் பெண்கள் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வேலூர் ஜெயிலில் நளினியை ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்து பேசினார்.

மிக, மிக ரகசியமாக நடந்து முடிந்த இந்த சந்திப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐகோர்ட்டில் மனு

இந்தநிலையில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா கோர்ட்டு தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 11.5.1999-ல் இதில் 19 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. 3 பேருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மீதி 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர்.

எனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கலாம் என்றும், பொதுமன்னிப்பு வழங்கலாம் என்றும் சோனியாகாந்தி தெரிவித்தார். இதன்பின்னர் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்தது. எனது கருணை மனுவை ஏற்று, கவர்னரும் ஆயுள் தண்டனையாக குறைத்தார். 24.4.2000 அன்று இது அரசு அறிவிப்பாக வெளியிடப்பட்டது.

16 ஆண்டுகளுக்கும் மேலாக

25.4.2000 முதல் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறேன். 16 ஆண்டுகள் 9 மாதம் 18 நாட்கள் ஜெயிலில் இருந்து வருகிறேன். 17.6.2005 அன்றே 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆகவே, விடுதலை பெற எனக்கு தகுதி உள்ளது. 2005, 2006, 2007 ஆகிய 3 ஆண்டுகளிலும் கைதிகளை விடுதலை செய்யும் பட்டியலில் என்னை சேர்க்கவில்லை. 14.9.2006-ல் மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் 472 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தவறு செய்யாதவர்

நான் சிறையில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. எனது நன்னடத்தை நன்றாக உள்ளது. என்னை விடுதலை செய்யலாம் என்று நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும், ஆலோசனை குழு கேட்கவில்லை. ஆகவே, என்னை விடுதலை செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

முறையானதல்ல

நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நளினி சார்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜரானார்கள். வக்கீல் எஸ்.துரைசாமி வாதாடுகையில், `ஆலோசனை குழுவில் 7 பேர் இருக்க வேண்டும் என்றும், ஆனால், 3 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அதுவும் முறையாக இந்த குழு நியமிக்கப்படவில்லை' என்றும் வாதாடினார். ஜெயிலின் நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும், ஆலோசனை குழு அந்த பரிந்துரையை ஏற்காதது தவறு என்றும் அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார்.

ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டாக இருந்தாலும் ஜெயில் விதிமுறைப்படி 14 ஆண்டுகள் இருந்தாலே முன்கூட்டியே விடுதலை செய்ய ஆலோசனை குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் வக்கீல் துரைசாமி வற்புறுத்தி கூறினார்.

இதன்பிறகு அரசு தரப்பு வக்கீலை பார்த்து, இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மனுவை விசாரணைக்கு அனுமதித்து, இதுபற்றி பதில் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கும், ஆலோசனை குழு, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

1 comment:

ttpian said...

Rajiv family used to conduct dramas-without any make-up!