Monday, 28 April 2008

கிழக்கு மாகாணத்தில் இலக்க தகடுகள் இல்லாத வாகனங்கள்: மக்களை அச்சுறுத்தும் முகமூடி மனிதர்கள்:

கிழக்கில் முகத்தை மூடிய நிலையில் செல்லும் நபர்கள் பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அக்கரைபற்று பிரதேசத்திலும் இன்று ( 28 -04 ) திருகோணமலை படித்தனை பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முகத்தை மூடியப்படி படித்தனை கிராமத்திற்கு சென்ற சிலர் அந்த கிராமத்தில் இருந்த 6 பேரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படவில்லை, காரணம் இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 6 பேரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான் குழு, புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் (நாபா)ஆகிய கட்சிகள் ஆயுதங்களுடன் திரிவதுடன், தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருவதாக கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பான அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இராணுவத்தினரும், காவல்துறையினரும் மறைமுகமாக உதவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலைமையில் கிழக்கு தேர்தல் நியாயமான முறையில் நடைபெற மாட்டாது என்பதற்கு இது சிறந்த சான்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுனாமி மற்றும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அதிகாரிகள் இதுவரை சரியான தகவல்களை வெளியிடவில்லை. இந்த நிலைமையானது தேர்தல் மோசடிக்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும் இடம்பெயர்ந்துள்ளவாகள் குறித்து பிரதேசவாரியான தகவல்களை அதிகாரிகள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லக்ஸ்மன் கிரியல்ல கேட்டுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க கூடிய வழிவகைகளை மேற்கொள்ளவதுடன் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

மண்முனை அல் ஷமாஸ் கல்லூரியை அக்கரைபற்று பிரதேச சபை தலைவர் தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதுடன் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச தபால் அலுவலகத்தின் மேல் மாடியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே துறைமுக அபிருத்தி அதிகார சபையின் சுற்றுலா விடுதிகள் அனைத்தையும் அமைச்சர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரச வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சேனல் ஐ தொலைக்காட்சியின் இது சம்பந்தமான காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளன. கிராம சேவையாளர்கள் தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 10 ஆயிரம் வாக்குச்சீட்டுகள் பெண்களிடம் இருந்து காவல்துறையினரால் கடந்த 23ஆம் திகதி கைப்பற்றப்பட்டன. கடந்த 26ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் மஜீட்டின் வீட்டுக்கு சென்ற சிலர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள், ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள், அரசாங்க வளங்கள் மற்றும் வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதானது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் நோக்கும் போது அரசாங்கம் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த தயாரில்லை என்பது உறுதிப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆயுதம் தாங்கியவர்கள் கிழக்கு மாகாணத்தில் இலக்க தகடுகள் இல்லாத வாகனங்களில் சென்று மக்களை அச்சுறுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் குழு முறையிட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்படும் இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த குழு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை கேட்டுள்ளது.

ஐக்கிய தேசியகட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜயலத் ஜயவர்தன, ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

No comments: