Wednesday 30 April 2008

இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகள் அதிகரித்துள்ளன- அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்துகின்றபோதும், விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக துணை இராணுவக் குழுக்களை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் தோன்றியிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள 2007ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் பாரிய வன்முறைச் சம்பங்கள் அதிகரித்திருப்பதுடன், பெருமளவானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டு தரப்பினரும் கடந்த வருடம் முழுவதும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 28ஆம் திகதி சமூக சேவைகள் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்களை இலக்குவைத்து பல பேரூந்துக் குண்டுத் தாக்குதல்களும், தொடரூந்துக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் 2ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானப்படையினரின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமையையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கருணா குழுவினரும் படுகொலைகளில் ஈடுபடுவதுடன், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இந்தக் குழுவின் முன்னாள் தலைவர் கருணா அம்மான் லண்டனில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் தலைவராகச் செயற்பட்டு வருவதுடன், கருணா தரப்பினரின் முழு கட்டுப்பாட்டையும் அவரே எடுத்துக்கொண்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜுலை மாதம் கிழக்கு மாகாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் தனக்குள் காணப்பட்ட அரசியல் குழறுபடிகள் காரணமாக தேர்தலை நடத்துவதற்கோ, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கோ முடியாதிருந்தது. எனினும், இலங்கையின் வடக்கின் சில பகுதிகளை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை கடந்த நவம்பர், டிசம்பர் பகுதிகளில் இலங்கை அரசாங்கப் படைகள் ஆரம்பித்துள்ளன.

விடுதலைப் புலிகளும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் துணைஇராணுவக் குழுக்களும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை முன்னெடுத்துவருவதாக மனித உரிமை அமைப்புக்களும், கண்காணிப்பாளர்களும் கூறியிருப்பதாக அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கருணா தரப்பினர் சிறுவர்களைப் படையில் இணைத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக 2007ஆம் ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: