Tuesday, 29 April 2008

உணவுக் கலக அபாயம்!

உணவுப் பொருட்களின் விலைகள் படுவேகமாக அதிகரித்து வருவதன் விளைவாக உலகில் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைவரம் குறித்து கடந்த வாரம் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் விடுத்திருக்கும் எச்சரிக்கை இன்று நிலவும் முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கவனத்தைப் பெரிதும் தூண்டுவதாக இருக்கிறது.
உணவு விலைகளில் காணப்படுகின்ற துரித அபிவிருத்தி வறிய நாடுகளில் 10 கோடிக்கும் அதிகமான மக்களை மேலும் படுமோசமான வறுமை நிலைக்குள் தள்ளிவிடக்கூடும் என்று உலக வங்கியின் தலைவர் றொபேர்ட் ஸலிக் தெரிவித்திருக்கும் அதேவேளை, பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்க வேண்டிய அபாயநிலை தோன்றப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ரோஸ் கான் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகில் உணவு விலைகள் கடந்த சில மாதங்களில் மிகவும் கடுமையாக அதிகரித்திருப்பதாகவும் சில நாடுகளில் நிலவிய சீரற்ற காலநிலையின் விளைவாக பயிர்கள் அழிந்துபோனமையும் போக்குவரத்துப் பயன்பாட்டுக்கான எரிபொருளுக்காக பயிர்களை வளர்ப்பதற்கு நிலங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருக்கின்றமையும் இந்த விலை உயர்வுகளுக்கு முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

கோதுமை, நெல் மற்றும் சோளம் போன்ற முக்கியமான உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பினால் ஒட்டுமொத்த உணவு வகைகளின் விலைகளில் கடந்த மூன்று வருடங்களில் 83 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது.

உணவு விலை அதிகரிப்புக் காரணமாக எகிப்து, ஐவறிகோஸ்ட், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உட்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் கலகங்களும் மூண்டிருந்தன. கரிபியன் தீவான ஹெய்டியில் தோன்றிய வன்முறைகளில் ஐந்து பேர் மரணமடைந்ததுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இறுதியில் உணவுக் கலகம் காரணமாக ஹெய்டி அரசாங்கம் கூட வீழ்ச்சியடைந்துவிட்டது.

இந்தியா, சீனா, வியட்நாம் மற்றும் எகிப்து போன்ற பிரதான நெல் உற்பத்தி நாடுகளில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இறக்குமதி நாடுகள் இந்தக் கட்டுப்பாடுகளின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் குழப்பநிலையைத் தோற்றுவித்திருக்கும் கடன் நெருக்கடியின் விளைவாகத் தோன்றியிருக்கும் நிலைவரத்தை ஆராய்வதற்காக உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் வார இறுதியில் முக்கியமான கூட்டங்களை நடத்தியிருந்தன.

சர்வதேச உணவு நெருக்கடியைக் கையாளுவதற்கு உலக வங்கியின் தலைவர் முன்மொழிந்திருக்கும் 'புதிய ஏற்பாட்டை' வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கியின் நிதித்துறை வழிகாட்டல் குழுவும் அபிவிருத்தி அமைச்சர்களும் அங்கீகரித்திருக்கிறார்கள். வறிய நாடுகளில் மக்களுக்கு உணவை வழங்குவதற்காக கூடுதல் உதவிகளைக் கேட்டிருக்கும் உலக வங்கியின் தலைவர், உலக உணவுத் திட்டத்தின் நிதியில் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் 50 கோடி அமெரிக்க டொலர்கள் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்வதற்கு தனவந்த நாடுகள் விரைவாக தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதேவேளை, பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் ஆபத்தான நிலை தோன்றப்போவதாக எச்சரிக்கை செய்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், உணவுப் பொருட்களின் விலைகளில் தொடர்ந்தும் கடும் அதிகரிப்பு ஏற்படுமானால் அதனால் தோன்றக் கூடிய ஏனைய பாதக விளைவுகள் குறித்தும் உலகநாடுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். கடந்தகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இத்தகைய நிலைவரம் சில சந்தர்ப்பங்களில் போரில் கூட முடிவடையலாம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இதனிடையே பிலிப்பைன்ஸில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அரிசி விலை குறைவடைவதற்கான சாத்தியம் கிடையாது என்று அபாய அறிவிப்பொன்றைச் செய்திருக்கிறது. முக்கிய உணவுப் பொருளான அரிசியின் உற்பத்தியை விடவும் அதற்கான கோரிக்கை பலமடங்கு அதிகமாக இருப்பதால் அரிசி விலை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் என்று அந்த நிறுவனம் 'றைஸ் ருடே' என்ற அதன் பிரசுரத்தில் தெரிவித்திருக்கிறது.

கடந்த வருடம் அரிசிவிலை 70 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. அண்மைய வாரங்களில் அரிசிவிலையில் ஒரு வித துரித அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அரிசி உற்பத்தி செய்யும் பல நாடுகள் ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. அரிசி உலகளாவிய ரீதியில் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பிரதான உணவுப் பொருளாக இருக்கிறது. அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உணவு விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பின் விளைவாக வறியநாடுகளில் தோன்றக்கூடிய நெருக்கடிகள் குறித்து உலக வங்கியும் சர்வதேச நாணய சபையும் விடுத்திருக்கும் அச்சுறுத்தல்களையும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் அரிசிவிலை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் என்று விடுத்திருக்கும் அறிவிப்பையும் நோக்கும் போது உலகளாவிய ரீதியில் பாரதூரமான உணவுநெருக்கடி தோன்றப் போகின்றது என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இந்த நெருக்கடியின் தெளிவான அறிகுறிகளை நாம் ஏற்கனவே கண்டுவிட்டோம்.

இன்று இலங்கையில் தோன்றியிருக்கும் முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு ஒரளவு நிவாரணத்தைக் தரக்கூடிய ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட திராணியற்றதாக அரசாங்கம் இருக்கிறது.

பாண் பாவனையில் 50 சதவீதவீழ்ச்சி ஏற்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சியடைவதாக அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடியை உணர்ந்துகொண்ட, ஒருதலைவரின் உணர்வு வெளிப்பாடாக எம்மால் கருத முடியவில்லை. உலகில் பல நாடுகளில் உணவுக் கலகம் மூளக்கூடிய அபாயம் குறித்து உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் விடுத்த எச்சரிக்கையின் பாரதூரத்தன்மையை புரிந்துணர்ந்து கொள்ளக்கூடிய அரசியல் பக்குவமும் முதிர்ச்சியும் அரசாங்கத்தலைவர்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு இயல்பாகவே ஏற்படுகிறது!

1 comment:

ttpian said...

Mahindha is not bothered!
He knows,"the know how" of begging from other countries!