Tuesday 29 April 2008

சென்னை ஓட்டலில் நடந்தது என்ன? ஜாக்கிசான் விளக்கம்

ஹாங்காங் : தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்தபோது நடந்தது என்ன? என்று ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஆஸ்கார் நிறுவனம் தயாரித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தசாவதாரம் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 25ம்தேதி நடைபெற்றது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமிதாப் பச்சன், மம்முட்டி உள்ளிட்ட இந்திய திரையுலக முன்னணி நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டனர்.


இந்த விழாவுக்காக சென்னை வந்த நடிகர் ஜாக்கிசான், நடிகர்கள் யாரையும் சந்திக்கவில்லை, இந்திய சமையலை சாப்பிடவில்லை, அவர் கொண்டுவந்த தண்ணீரைத்தான் குடித்தார் என்பன போன்ற செய்திகள் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியாயின. தன்னைப் பற்றி இணையதளங்களில் வெளியான செய்திகளை படித்த ஜாக்கிசான், அவதூறுகளுக்கு பதில் அளித்துள்ளார். இதுபற்றி ஜாக்கிசானின் அதிகாரப்பூர்வமான இணையதளமான ஜாக்கிசான் டாட் காமில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்டுள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்னை வந்தேன். இந்தியா வருவதை நினைத்து ‌பெருமிதமாக நினைத்துதான் இந்த பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் என்னைப்பற்றி பல அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. இதனை இணையதளத்தில் படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அதனால்தான் இந்த அறிக்கையை உடனடியாக வெளியிடுகிறேன். இந்தியாவில் உள்ள பாட்டில் குடிநீரை நான் குடிக்க மறுத்ததாகவும், வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தண்ணீரையே குடித்ததாகவும் ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய உணவு பிடிக்காததால் எனக்கென்று சமையல் ஆளை அழைத்து வந்ததாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. நான் பல இந்திய சினிமா நட்சத்திரங்களுடன் பேசவில்லை என்றும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய கலாச்சாரம், சினிமாவை பெரிதும் மதிப்பவன் நான். எனக்கு இந்திய நடிகர்களின் பெயர் தெரியாவிட்டாலும், அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் சரியாக உச்சரிக்க வராவிட்டாலும், அவர்களை நான் மதிக்க தவறியதே இல்லை. நான் இந்திய உணவை விரும்பி உண்பவன். சென்னையில் 2 முறை இந்திய உணவுகளை வாங்கி சாப்பிட்டேன் என்பது உண்மை.

No comments: