Wednesday 30 April 2008

புலிகளிடம் சம்பளம் பெறும் 13 சிங்களவர்கள்: இரகசிய காவற்துறை:

பிலியந்தல குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் மேலும் 13 சிங்கள புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு தலா 50,000 ரூபாவை விடுதலைப் புலிகள் சம்பளமாக வழங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஒருவரையும் மற்றும் இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் ஒருவரையும் கொலை செய்யுமாறு கிளிநொச்சியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பிலியந்தலை குண்டு வெடிப்புச் சூத்திரதாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பிலியந்தலை, கெஸ்பாவ, தெஹிவல மற்றும் கல்கிஸ்ஸ பிரதேச பஸ் நிலையங்களில் சிவில் மக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்துமாறு கிளிநொச்சியிலிருந்து உத்தரவு கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிலியந்தலை குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சிங்கள நபர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரணசிங்க ஆரச்சிகே புத்திக என்ற 21 வயது இளைஞர் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக காவற்துறைத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவமொன்றில் பணியாற்றும் புத்திகவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாதமொன்றுக்கு 50,000 ரூபா சம்பளமாக வழங்கியதாகத் கூறப்படுகிறது. கொழும்பில் குண்டு வெடிப்பை மேற்கொள்ளவதற்கு உதவி புரிவதற்காக 13 சிங்கள நபர்களுக்கு புலிகள் மாதாந்தம் சம்பளம் வழங்குவதாக குறித்த இளைஞரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: