Wednesday 30 April 2008

தமிழக தலைவர்களை கடத்த திட்டம் : கருணா பிரிவு சதி

Imageதமிழகத்தில் விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவ முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்த போரில் தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப்புலிகளும் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப்புலிகள் மீது இந்த பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு ரோந்து பணியில் போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், லாட்ஜகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

No comments: