Monday, 28 April 2008

தமிழீழ கடல் பகுதியிலும்-- நர்கீஸ் புயல் - கன மழை எச்சரிக்கை!

Storm
சென்னை: சென்னையிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகை, ஓங்கோல் இடையே இது கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரியைத் தொட்டு வெயில் வாட்டி வருகிறது. கத்திரி வெயிலும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் சின்னம், வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியளவில் புயல் சின்னம் சென்னைக்குக் கிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. புயல் சின்னத்தின் வேகத்தை வைத்து சென்னை, கடலூர், நாகப்பட்டிணம் துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கைக் கூண்டும், பாம்பன், தூத்துக்குடியில், தமிழீழ கடல் பகுதியிலும் 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.,

புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். தமிழகத்தின் வட பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலின் தற்போதைய போக்கின்படி அது நாகப்பட்டிணம், ஓங்கோல் இடையே கரையைக் கடக்கக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

No comments: