Tuesday 29 April 2008

பிலியந்தல குண்டு வெடிப்பு: காவற்துறை பொறுப்பதிகாரி மாற்றம்:--முகமாலைத் தோல்விக்காக அல்லது கோட்டபாயராஜபக்ஸ சரத் பொன்சேகா இடமாற்றப்படுவார்களா???

பிலியந்தல குண்டு வெடிப்பை அடுத்து, பிலியந்த காவல்துறை பொறுப்பதிகாரி டப்ளியூ.கே லயனல், பம்பலப்பிட்டி விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தல குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி துஸ்மன்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் கே.விக்கிரமரத்தனவின் விசேட உத்தரவின் பேரில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிலியந்தல நகரில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான பொறுப்பை பிலியந்தலை காவல்துறை பொறுப்பதிகாரியின் மேல் சுமத்தும் நோக்கில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச மக்கள் லயனல் இடமாற்றம் செய்யப்பட்டதன் மூலம் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிறுத்தி விட முடியாது என கூறியுள்ளனர்.

காவல்துறையினரிடம் பல குறைப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் பிலியந்தலை குண்டு வெடிப்பு காவல்துறையினரின் குறைப்பாட்டால் இடம்பெற்றது என கூறி ஆட்சியாளர்களால் விலகி செல்ல முடியாது.

இந்த பிரச்சினைக்காரணமாக லயனல் இடமாற்றம் செய்யப்பட்டார் என்றால் தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகமாலைத் தோல்விக்காக பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயராஜபக்ஸ அல்லது இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இடமாற்றப்படுவார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments: