Wednesday 30 April 2008

இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு

* நீதிமன்றம் செல்ல இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு உரியமுறையில் இலவசப் பாடநூல்கள் விநியோகிக்கப்படாமையால் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் இலங்கை ஆசிரியர் சங்கம் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

இவ்வருடத்தில் அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பமாகி நாளை வியாழக்கிழமையுடன் 4 மாதங்கள் பூர்த்தியாகின்றன. எனினும், இதுவரை தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு உரியமுறையில் பாடநூல்கள் விநியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து ஊடகங்களுக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எடுத்துக்கூறிய போதும் `செவிடன் காதில் ஊதிய சங்கு' போன்று அமைந்ததாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியதுடன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்;

"இலவசப் பாடநூல்கள் இதுவரை மாணவர்களை சென்றடையவில்லை. குறிப்பாக தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களின் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை ஆசிரியர் சங்கம் மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளது" என்றார்.

இது குறித்து தமிழர் ஆசிரியர் சங்க நிர்வாகச் செயலாளர் சீ.சரவணபவானந்தன் கூறும்போது;

வழக்குத் தொடரும் ஆசிரியர் சங்கத்தின் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம். தமிழ்மொழி பாடசாலைகளுக்கே இலவசப் பாடநூல்கள் உரியமுறையில் விநியோகிக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் குறைவான புள்ளிகளைப் பரீட்சையில் பெறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் கல்வியமைச்சு ஏற்கவேண்டும்.

தனியார் பாடசாலைகள் அதிக பணத்தைக் கொடுத்து பாடநூல்களை கொள்வனவு செய்துள்ளமையும் அரசாங்கப் பாடசாலைகளுக்கு உரியமுறையில் நூல் விநியோகிக்கப்படாமைக்கு மற்றுமொரு காரணமெனவும்" அவர் குறிப்பிட்டார்.

No comments: