ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான ஆப்கானிய மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும், சிலர் அயல்நாடான பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்திருப்பதாகவும் ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகக் குறைந்தது, 1,000 பேராவது உணவுப் பற்றாக்குறை காரணமாக ஆப்கானின் வடக்கு மாகாணமான பதகஸ்கானின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமது வீடுகளை விட்டும் வெளியேறியிருக்கின்றனர் என ஆப்கான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அதிகாரி நாசிர் ஹெமாத் தெரிவித்திருக்கிறார்.
"இவர்களில் பலர் வேறு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறையினால் இடம்பெயர்ந்துள்ள கந்தஹார்,சாபூல், ஹெல்மண்ட், மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே ஆப்கானில் இடம்பெற்றுவருகின்ற ஆயுத மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் கோதுமை மாவின் விலை 100 வீதத்தினால் அதிகரித்திருப்பதாக ஆப்கான் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் உணவு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் உணவுச் சந்தை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment