தமிழர்களின் போராட்ட நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது.
அது தவறு என்ற கருத்துப்பட உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் க.வி. விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றுப் பிற்பகல் யாழ்.பொது நூல்நிலைய கேட்போர்கூடத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை அவர் நிகழ்த்தினார். அப்போதே அவர் மேற்கண்ட கருத்துப்படக் கூறினார்.
அவர் தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது:
2002ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உடன்பாட்டைத் தொடர்ந்து சமஷ்டி என்ற கருத்து கூடிய ஏற்புடைமையைப் பெற்று வருகின்றது என்று கூறலாம். என்றாலும் அண்மைய கால அரசியலில் ஒஸ்லோ தீர்மானத்தைத் கிடப்பில் வைத்து இவை ஒன்றையும் ஏற்காது போரினால் முழுமையாகத் தமிழ் மக்களை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் தமிழ் மக்களையும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினரான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் வேற்றுமைப்படுத்திக் காட்டி, விடுதலைப் புலிகள் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை அழித்தால் அரசாங்கம் முன்வைக்கும் எந்த ஒரு தீர்வையும் தமிழ் மக்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தில் தமது நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.
அதற்கு வசதியாகப் பயங்கரவாத முத்திரையைப் பொறித்து, அரசாங்கம் வன் முறையில் ஈடுபட்டால் அது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாகும். ஆனால் அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக எவரேனும் நடவடிக்கை எடுத்தால் அது பயங்கரவாதம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வருகின்றது.
ஆனால் தமிழ் இளைஞர்களின் வன்முறையை அடக்குவது நோயின் அடையாளங்களை அடக்குவது போன்றதே. நோயை அடக்க வேண்டுமானால் அரசியல் தீர்வு அவசியம். இன்று புலிகளை அடக்கினால் நாளை சிறுத்தைகள் அவதரிப்பர். சிறுத்தைகளை அடக்கினால் அடுத்தநாள் கழுகுகள் உதிக்கக்கூடும். சென்ற ஐம்பது ஆண்டுகள் உள்ளூரில் நடத்தி வந்த போராட்டம் இன்று திபேத்தியர்களால் உலகாளவ எடுக்கப்பட்டுள்ளதென்றால் ஐம்பது வருடங்கள் அவர்களின் நோய் உள்ளுற உறைத்துக் கொண்டே உறைந்திருந்தது என்று அர்த்தம்.
ஒரு மக்கள் கூட்டத்தினரை என்றென்றைக்கும் ஒழித்துக் கட்டலாம் என்று அரசாங்கங்கள் எண்ணக்கூடாது. தாம் நடத்தும் அரச பயங்காரவாதம் உலக நாடுகளினால் தட்டிக் கேட்கப்படமுடியாது என்று எண்ணிவிடக் கூடாது இந்த அரசாங்கங்கள்.
விடிவை நோக்கி நாங்கள் மட்டும் செல்ல வில்லை. உலகமே அந்த யாத்திரையில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் அண்மைக் காலங்களில் R2P என்ற ஒரு கருத்து மேலோங்கி வருகின்றது The Right to Protect அல்லது பாதுகாக்கும் உரித்து என்ற இந்தக் கொள்கையின் படி அயல்நாடு களில் நடக்கும் அட்டூழியங்களை எம் நாட்டினர் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாதிருக்க இடமளிக்கக்கூடாது. தட்டிக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு என்கிறது R2P. தட்டிக் கேட்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகள் சேர்ந்து பாதுகாக்கவும் பிரயத்தனங்கள் எடுக்க வேண்டும்.
பாப்பரசர் சொன்னது, சென்ற வாரம்தான் 16 ஆவது பாப்பரசர் ஆசீர்வாதப்பர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன் நிகழ்த்திய ஒரு பேச்சில் பின்வருமாறு கூறினார்:-
""கொடூரமான தொடர் மனித உரிமை மீறல்களில் இருந்து ஒவ்வொரு நாடும் அதன் மக்களைப் பாதுகாப்பது அந்நாட் டின் தலையாய கடமை''.
தொடர்ந்து அவர் பேசுகையில், ""நாடுகளால் தமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிடில் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் வேறு சர்வ தேச ஆவணங்களின் அடிப்படையில் சட்ட பூர்வமாக சர்வதேச நாடுகள் இடைபுகுந்து தலையிடவேண்டும்'' என்றார்.
இவ்வாறு இடைபுகுவது ஒரு நாட்டின் இறைமையைப் பாதிக்கும் செயல் என்று சிலரால் கூறப்பட்டதை பாப்பரசர் மறுத்திருக்கிறார். ""இவ்வாறு இடை புகுவதை தேவை யற்ற குறுக்கீடாகவோ நாடுகளின் இறைமையைக் கட்டுப்படுத்துவதாகவோ கத்தோலிக்கத் திருச்சபை கருதவில்லை'' என்றும் கூறினார்.
உலகின் கண்ணோட்டம் மாறியுள்ளது. பரிதவிக்கும் அப்பாவி மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பது மற்றைய நாடுகளின் கடமையும் உரிமையும் என்று ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தினரின் விடிவிற்காகப் போராடும் ஒரு வளர்ச்சிக் கட்டத்தினுள் உலகின் கண்ணோட்டம், அதன் எண்ணோட்டம் உள்நுழைந்துள்ளது என்றும் கூறலாம்.
நூறு வருடங்களுக்கு முன்னிருந்த உலகம் அல்ல தற்பொழுது நாம் வாழும் உலகம். ஒரு குடும்பத்தில் மனைவி அடி வாங்கிவிட்டு அது என் கர்மம் என்று வாளாதிருந்த காலம் அப்போது. எனக்கும் உரித்துண்டு என்று எதிர்த்துப் பேசி அடிப்பவர்களை அசிங்கப்படுத்தக்கூடிய ஒரு ஆளுமையைப் பெற்றுள்ள காலம் இப்போது.
நாடுகளும் நாட்டு மக்களும் மக்கட்கூட்டத்தினரும் அப்படித்தான். அறிவு முதிர்ச்சி, ஆற்றல், ஆளுமை ஆகியவற்றை இன்று மக்கள் பெற்றுள்ளார்கள். இதை நாம் மறுத்தலாகாது. துப்பாக்கியை வைத்துக் காட்டி மிகத் தூரம் பயணிக்க முடியாது என்பதை நாட்டரசாங்கங்களும் நாட்டாண்மைக்காரரும் உணர்ந்தே தீரவேண்டும்.
ஆகவே அரசியல் விடிவை நோக்கிச் செல்லும் நாங்கள் எமக்கிருக்கும் தீர்வுகள் பற்றி இதுவரை மேல்வாரியாக ஆராய்ந்துள்ளோம். நாங்கள் விடிவைத் தேடும் அதேநேரம் உலக மக்களும் அவர்களின் அரசியல், சமூகப், பொருளாதார, சமய நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகப் போராடி வருகின்றனர். என்பதை மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சூழலுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டும். இன்று இருக்கும் உலகம் நாளை இருக்காது. எமது நோக்குகள், இலட்சியங்கள் என்பன சூழலுக்கு ஏற்ப மாற்றமடையக் கூடும். மாறிவருஞ் சூழலுக்கு ஏற்ப நாமும் நமது நடவடிக்கைகளை மாற்றி விடிவை நோக்கிச் செல்வதே அறிவுடை நோக்கு. கடந்த காலத் தலைவர்கள் கூறியதை மனதில் எடுக்கும் அதேநேரம் நிகழ்கால வாழ்விற்கு நாங்கள் பொறுப்பு என்பதை நாங்கள் மறக்கக்கூடாது.
தந்தை செல்வா அரசியல் சம்பந்தமாகக் கூறியவற்றை மனதில் வைத்து இன்றைய நிலைமைகளைக் கணக்கில் எடுத்து அரசியல் விடிவை நோக்கி எதிர்காலத்தினுள் காலடி எடுத்து வைப்பதே எங்கள் கடமை. முதியோர்களாகிய எங்கள் காலம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்களே விடிவை நோக்கி விரைந்து செல்ல வல்லவர்கள். அந்த விதத்தில் ஊக்கமுடைய எங்கள் இளைஞர்கள் நல்லதொரு எதிர்காலத்தை எமக்குப் பெற்றுத்தர இறைவன் அவர்களே ஆசீர்வதிப்பாராக! என்று தெரிவித்தார்.
Saturday, 26 April 2008
புலிகளை அழித்துவிட்டால் தமிழர் எந்தத் தீர்வையும் ஏற்பர் என எண்ணுவது தவறு!-sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I agree with :PAPPARASAR: Amen!
Post a Comment