Sunday 27 April 2008

கிழக்கில் குவியும் அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாரிய பிரச்சினைகள்!!!

எதிர்வரும் மே 10ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கும் தேர்தல் பிரசாரப் பணியிலீடுபடும் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்பு அதிகாரிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதும் இன்றும் அங்கும் இங்கும் புலிகள் தமது கைவரிசையைக் காட்டியே வருகின்றனர்.

கடந்த வாரத்தில் திருகோணமலையில் தம்பலகாமம் வீதியில் கிளைமோர் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் பிரசாரத்தில் பங்குபற்றும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்புத் துறையினர் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

ரவூப் ஹக்கீம் அந்த வீதியில் பிரயாணஞ் செய்வதாக பாதுகாப்புத் துறையினருக்கு முன் அறிவிப்புச் செய்யப்பட்டு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறான போதும் பாதுகாப்பு பேச்சாளர் இந்த குண்டு காலையில் வீதிகளைப் பரிசோதிக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது இலகுவானதல்ல. லலித் அதுலத் முதலி, காமினி திஸாநாயக, ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ போன்ற பல தலைவர்கள் மக்கள் கூடிநின்ற கூட்டங்களின் போதே படுகொலை செய்யப்பட்டனர். அமைச்சர் ஜெயராஜ்கூட மக்கள் கலந்துகொண்ட வைபவம் ஒன்றிலே கொல்லப்பட்டார். இந்த நிலைமையினைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் கிழக்கில் மாலை 6.00 மணிக்குப் பின் கூட்டங்கள் நடத்துவதனைத் தடைசெய்துள்ளது.

இதேநேரம், ஆளும்கட்சியின் மே தின விழா அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தெஹியத்தைக் கண்டியில் நடத்தப்படவுள்ளது. அரசின் இத்தீர்மானம் பாதுகாப்புப் பிரிவினருக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

தேர்தலுக்;குப் பாதுகாப்பு வழங்குவதற்கு மேலதிகமாக: சுமார் 30,000 மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கும் இந்த மே தின விழாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் பொறுப்பும் பாதுகாப்பு பிரிவினருக்குள்ளது.
அம்பாறையில் மே தினத்தை நடத்துவது குறித்து அரச உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலே இந்தக் கொண்டாட்டம் நடாத்தப்படுகின்றது.

இன்றுள்ள சூழலில் இந்த வைபவத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமாயின் அரசுக்கு அது தேர்தலுக்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், சிங்கள, தமிழ் புத்தாண்டு முடிவுற்றதும் கிழக்கு மாகாணத்தை முற்றுகையிட்டு வரும் ஆளும், எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு போதிய ஆளணியினரை ஈடுபடுத்துவதும் பாதுகாப்புப் பிரிவினர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகவுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் படுகொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. படுகொலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியின் சிம்மினூடாகப் பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.


தற்கொலைதாரியும் அவருக்குதவிய சகாக்களும் நீண்ட காலமாக வேறு வேறு பகுதியில் வசித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெறும் அதேவேளை, பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்ட பலவீனங்கள் குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அமைச்சர் ஜெயராஜ் கொலைக்கு அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவுக்கும் (எம்.எஸ்.டி) விசேட அதிரடிப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடும் காரணம் எனக் கூறப்படுகின்றது. நீர்கொழும்பு வீதியில் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் த.மு. தஸநாயகவின் படுகொலையையடுத்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ் அமைச்சர் ஜெயராஜின் பாதுகாப்பு பொறுப்பு விசேட அதிரடிப்படையினரிடம் வழங்கப்பட்டது.எம் எஸ் டி அமைச்சரின் பாதுகாப்பினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இரு பிரிவினரும் கலந்தே பாதுகாப்பினை மேற்கொண்டனர்.

அமைச்சர் ஜெயராஜிற்கு துப்பாக்கி துளைக்காத ஏழு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு வரும்போது அவரது பாதுகாப்புக்காக 1500 பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குண்டு துளைக்காத ஏழு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தது என்ற கூற்றினை அமைச்சர் ஜெயராஜின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் பிரமுகர்களது பாதுகாப்புக்கு இந்தியாவிலிருப்பது போன்று விசேட பாதுகாப்புப் பிரிவொன்றினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலுள்ள ‘பிளக்கெட்’ போன்ற ஒரு விசேட பிரிவினை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது பிரபுக்களின் பாதுகாப்புக்காக பல பிரிவுகள் வேறு வேறாகப் பணி புரிகின்றன.

சிலருக்கு விசேட அதிரடிப்படை வழங்கப்பட்டுள்ளது. மற்றும் சிலரது பாதுகாப்புக்கு இராணுவ கொமான்டோ படையினர் ஒதுக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல் இல்லாத சாதாரண அமைச்சர்களது பாதுகாப்பு பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரிந்து பிரிந்து செய்படுவதன் மூலம் நிர்வாகப் பிரச்சினைகள் பல ஏற்பட்டிருப்பதோடு ஒவ்வொரு பிரிவினருக்குமிடையே தொடர்பின்மை காரணமாக பாதுகாப்பு தொடர்பாக கடைபிடிக்கும் உபாய வழி முறைகளிலும் சிக்கல் உருவாகியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு கொமான்டோ, கமுனு உட்பட பல ரெஜிமென்டுகள் பொறுப்பாக இருக்கின்றன. பாதுகாப்புச் செயலாளரது பாதுகாப்பும் அதே பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக கொமாண்டோ படையினர் பணி புரியும் அதேவேளை, அமைச்சர் சமல் ராஜபக்ஸவிற்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு பிரிவுக்கும் தனியான கட்டளையிடும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலான முறையை மாற்றி ஒரே சின்னத்தின் கீழ் பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவொன்றினை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

No comments: