Tuesday 29 April 2008

லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் எட்டு 500 ரூபாய் நோட்டுகளை விழுங்கிய சப்-இன்ஸ்பெக்டர் தொண்டையில் சிக்கிய பணத்தை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்

லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும், லஞ்சமாக பெற்ற எட்டு 500 ரூபாய் நோட்டுகளை விழுங்கிய சப்-இன்ஸ்பெக்டர், பஸ்சில் ஏறி தப்ப முயன்றார். அவரை திருடன் என நினைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது தொண்டையில் சிக்கிய ரூபாய் நோட்டுகள் பின்னர் வெளியே எடுக்கப்பட்டன.

லஞ்சம் கேட்டார்

ஆந்திர மாநிலம் ஐதராபாத் ஹுமாயுன் நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரகிரண் ரெட்டி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது சக்காரியா என்பவரை கடந்த மாதம் வரதட்சணை வழக்கில் கைது செய்தார்.

பிறகு முகமது சக்காரியா ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சந்திரகிரண் ரெட்டியை சந்தித்து, தன்னை வரதட்சணை வழக்கில் இருந்து விடுவிக்க உதவும்படி கேட்டுக் கொண்டார். அப்படி விடுவிப்பதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருமாறு சந்திரகிரண் ரெட்டி கேட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது சக்காரியா, உடனடியாக இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சந்திரகிரண் ரெட்டியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

ரூபாய் நோட்டுகளை விழுங்கினார்

இதன்படி, முகமது சக்காரியாவிடம் ரசாயனம் தடவிய எட்டு 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் கொடுத்தனர். சக்காரியா அந்த நோட்டுகளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சந்திரகிரண் ரெட்டியிடம் கொடுத்தார். அப்போது வெளியே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சந்திரகிரண் ரெட்டியை பிடிக்க முயன்றனர்.

சுதாரித்து கொண்ட சந்திரகிரண் ரெட்டி, எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் சுருட்டி, தனது வாயில் போட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டி சென்றனர்.

தர்ம அடி

அப்போது அந்த வழியாக வந்த டவுன் பஸ்சில் சந்திரகிரண் ரெட்டி ஏறினார். பயணிகள் அவரை திருடன் என நினைத்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பயணிகளிடம் இருந்து மீட்டனர்.

தொண்டையில் சிக்கியது

சந்திரகிரண் ரெட்டியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தபோது அவரால் பேச முடியவில்லை. அவசரமாக விழுங்கியதால் லஞ்ச பணம் அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து போலீசார் அவரை உஸ்மானியா மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அவரது தொண்டைக்குள் சிக்கி இருந்த பணத்தை வெளியில் எடுத்தனர். பின்னர் அவர் வாயில் இருந்த ரசாயன திரவத்தை வெளியே எடுத்து ஒரு பாட்டிலில் அடைத்தனர். லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக, சந்திரகிரண் ரெட்டி `சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, `நான் கடந்த 4 ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காமல் வேலை செய்தேன். தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதால் சிறிது காலம் ஓய்வு கிடைக்கும்' என்றார்.

1 comment:

ttpian said...

I need a report:How many
"THARMA ADI/KUTHOO/SATHOO?
Urgent