Sunday 27 April 2008

முகமாலைச் சமரில் காணாமல் போன இராணுவத்தினர் பலர் புலிகள் கட்டுப்பாட்டில்---தமது பெற்றோர் உறவினருடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்--லக்ஷ்மன் கிரியெல்ல

வடக்கில் யுத்தத்தை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம் தென்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்கான எத்தகைய திட்டமும் கிடையாது. அரசாங்கம் இராணுவ இரகசியங்களை பாதுகாப்பதற்கு தவறியதன் காரணமாகவே முகமாலையில் எமது படையினரின் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

முகமாலைச் சமரில் காணாமல் போன இராணுவத்தினரில் பலர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்கள் தமது பெற்றோர் உறவினர்களுடன் தொலை பேசியில் பேசியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

இராணுவ இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதன்போதே யுத்த களத்தில் எமது படையினர் வெற்றி இலக்கை அடையும் முடியும். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் பாராட்டுக்களை பெறுவதற்காகவும் படையினர் முன்னெடுக்கவுள்ள யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் பக்கம் பக்கமாக தகவல்களை வழங்குகின்றனர். இதன் காரணமாகவே எமது நாட்டைக் காக்கும் படையினர் அநியாயமாக உயிரிழக்கின்றனர்.

தொப்பிகல கைப்பற்றப்பட்ட போதும் இதுபோன்ற கட்டுரைகளால் புலி உறுப்பினர்கள் வன்னிக்கும் மொனராகலைக்கும் தப்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே புலிகளுக்கு தகவல்கள் கிடைப்பதற்கு உளவாளிகள் தேவையில்லை.

முகமாலை மீதான அண்மைய தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியட்நாமுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். இது போன்ற முக்கிய படை நடவடிக்கையின்போது அவர் நாட்டில் இருந்திருக்க வேண்டும். இதேபோல வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்திருந்தபோதும் முகமாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு எமது படையினர் அநியாயமாக உயிரிழந்தனர்.

அன்று வரவு செலவு திட்டம் இன்று கிழக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மக்கள் ஆதரவை பெறவும் அச்சுறுத்தவும் அரசியலுக்காக முகமாலை படை நடவடிக்கையைஅரசாங்கம் நடத்தியுள்ளது.

நாட்டை பாதுகாக்கும் வீரமிக்க எமது படையினரின் உயிர்களை அரசியலுக்காக பலிகொடுத்துள்ளதன் மூலம் நாட்டின் சுயாதிபத்தியத்திற்கு அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த சிந்தனை மூலம் மக்களுக்கு வழங்கிய 164 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலும் ஊழல் மோசடிகள், விலைவாசி உயர்வு வெளிநாட்டுக் கொள்கை முரண்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் சென்று விளக்கமளிக்க முடியாத அரசாங்கம் யுத்தத்தை முன்னிறுத்தி அனைத்தையும் மறைக்க முயல்கிறது.

யுத்தத்தை மேற்கொள்வதாக கூறினாலும் தென்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்தவிதமான வியூகத்தையும் வகுக்கவில்லை. ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு பயந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவில்லை. அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கிலேயே பேச்சுக்களை ஆரம்பித்தார். அதே புலிகளின் ஆயுதக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. கடற்படைக்கு புதிய கப்பல்களும் கொள்வனவு செய்யப்பட்டன.

இப்பேச்சுவார்த்தைகள் மூலமே கருணா உட்பட 6000 பேரை புலிகளிடமிருந்து பிரிக்க முடிந்தது. இது தொடர்ந்திருக்குமானால் மேலும் பலர் பிரிந்திருப்பார்கள்.

யுத்தத்தால் சாதிக்க முடியாததை நாம் பேச்சுவார்த்தைகளால் சாதித்தோம். ஆனால் இடை நடுவில் முட்டுக்கட்டை போடப்பட்டன. கடந்த இரண்டரை வருடங்களில் 9000 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் படையினரின் தொகை அதிகம். 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வடக்கு கிழக்கில் அகதிகளாக வாழ்கின்றனர்.

யுத்தத்தின் உண்மை நிலைவரத்தை அரசாங்கம் எதிர்க்கட்சிக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். அதன் மூலம் எதிர்க்கட்சியின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முனைய வேண்டும். அம்பாறை மாவட்டத்திலிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு அங்கு இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வெலி ஓயாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்களை இராணுவத்தின் மூலமே தடுக்க முடியும்.

அண்மையில் இடம்பெற்ற முகமாலைச் சமரில் காணாமல் போன இராணுவத்தினர் பலர் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவென்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தமது பெற்றோர் உறவினருடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்

1 comment:

ttpian said...

Devils preaching!