Tuesday 29 April 2008

இனிய வாழ்வு இல்ல நிதிக்காக வெண்புறாவின் "தாயகக்காற்று" பாடல் போட்டி

இனிய வாழ்வு இல்ல நிதிக்காக "வெண்புறா" அமைப்பின் சார்பில் "தாயகக்காற்று பாடல்" போட்டி பிரித்தானியாவில் நடைபெற்றது.

லண்டன் குறொய்டன் சேர்லி வீதியில் அமைந்துள்ள அஷ்பேர்டன் கொம்யூனிற்றி பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (26.04.08) மாலை இப்போட்டி நடத்தப்பட்டது.

தமிழ் இளையோர் மத்தியில் தாயக உணர்வை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 35 போட்டியாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.



மாலை 6:00 மணியளவில் தொடங்கிய தாயகப் பாடல் போட்டி இரவு 11:30 மணிவரை நீடித்திருந்தது.

மங்கள விளக்கினை வெண்புறாவின் தொண்டர்களான சிங்காரவடிவேல் தம்பதிகள் ஏற்றினர்.

கீழ்ப் பிரிவிற்கான போட்டியும் மேற்பிரிவிற்கான போட்டியும் நடைபெற்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்பிரிவுக்கு மட்டும் நடைபெற்று வந்த இப்பாடல் போட்டி இம்முறை சிறுவர்களும் கலந்து கொள்ளும் வகையில் கீழ்ப்பிரிவிலும் இடம்பெற்றிருந்தது.

போட்டியின் நடுவர்களாக கலைமாமணி யசோதா மித்திரதாஸ், பாவலர் கந்தையா இராஜமனோகரன் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர்.

துசி-தனு சகோதரிகளும், நண்பர்களும் இணைந்து தாயகப் பாடல்களுக்கு இசை வழங்கியிருந்தனர்.

"வெண்புறா" அமைப்பின் ஐரோப்பிய பொறுப்பாளர் மருத்துவ கலாநிதி என்.எஸ்.மூர்த்தி தனது சிறப்புரையில், வெண்புறாவின் பணிகள் பற்றியும், தாயகத்தின் தற்போதைய நிலை பற்றியும் எடுத்துக்கூறியதுடன், தாயகத்தை மக்கள் தொடர்ச்சியாகப் பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலிறுத்தினார்.

பிரித்தானிய இளைய தலைமுறையை தாயகத்தை நோக்கி நெறிப்படுத்தும் வகையில்

"தாயகக்காற்று" என்ற தாயகப்பாடல் போட்டி,

"நர்த்தன மாலை" என்ற பரத நாட்டியப் போட்டி,

"சின்னப் புறாக்கள்" என்ற பொது அறிவுப் போட்டி,

விளையாட்டுப் போட்டி,

மரதன் ஓட்டம்,

நடைப்பயணம்

ஆகியவற்றுடன் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை "வெண்புறா" அமைப்பு ஆண்டுதோறும் நடாத்தி வருகின்றது.

No comments: