Sunday, 27 April 2008

முகமாலை களத்தில் அடிவாங்கிய 53 ஆவது படையணியின் தளபதி பதவி நீக்கம்: "சண்டே ரைம்ஸ்"


வட போர்முனையான முகமாலை களமுனையில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவம் சந்தித்த பேரிழப்பைத் தொடர்ந்து 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

முகமாலை களமுனை சிறிலங்காப் படையினரின் கொல்களமாக மாற்றமடைந்துள்ளது. மகிந்தவின் காலப்பகுதியில் இக்களமுனையில் இரு சமர்கள் மிகவும் உக்கிரமாக நடைபெற்றன.

இதில் பெருமளவிலான படையினர் உயிர்களையும், தமது உடல் உறுப்புக்களையும் இழந்திருந்தனர்.

2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதமும், கடந்த வருடம் நவம்பர் மாதமும் இம் மோதல்கள் நடைபெற்றிருந்தன.

கடந்த மாதம் இப்பகுதிக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் இராணுவம் தென்முனையில் மேலும் ஒரு களமுனையை திறக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகள் படையினரின் நிலைகளை தாக்கியதாகவும், இம் மோதல்களில் 43 படையினர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல அடுத்த நாள் தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை இராணுவத் தலைமையகத்திற்கு அழைத்த இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, 47 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காணாமல் போய் விட்டதாகவும், 300 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இராணுவம் 600 மீ தூரம் முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அவரது தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களில் இருந்து 100 மீ தொலைவிலேயே இராணுவம் தற்போது நிலைகொண்டிருக்க வேண்டும். படையினரின் தகவல்களின் படி விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தியிருந்தால் அது தொடர்பில் பல கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.

முதலாவதாக, 16 நாட்களுக்கு முன்னர் மிகவும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரண்கள் என படை அதிகாரிகளால் ஊடகவியலாளர்களுக்கு காட்டப்பட்ட பகுதிகள் மீது எவ்வாறு விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்? இத்தாக்குதலில் 47 படையினர் கொல்லப்பட்டிருந்தால் அது அந்நிலைகளின் பலவீனத்தையே காட்டும்.

இதனிடையே 800 விடுதலைப் புலிகள் கடந்த வாரம் முகமாலை களமுனைக்கு நகர்த்தப்பட்டிருந்ததாக படையினரின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இம் மோதல் தொடர்பான தகவல்களை வட போர்முனையில் உள்ள இராணுவத்தினர், இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் இருந்து நாம் பெற்றுள்ளோம்.

அதிகாலை 2:30 மணியளவில் இராணுவத்தின் 53 மற்றும் 55 ஆவது படையணிகள் முன்நகர்வை தொடங்கின.

53 ஆவது படையணியை அதன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சமந்த சூரிய பண்டாரா வழிநடத்தினார்.

55 ஆவது படையணியை பிரிகேடியர் கமல் குணரட்ண வழிநடத்தியிருந்தார்.

5,000 படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகள் முதலில் தமது முன்னணி அரணில் இருந்து பின்வாங்கியிருந்தனர். படையினர் அதனை அடைந்த போது அவர்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. கடும் சமர் மூண்டது. பின்னர் படையினர் தமது நிலைகளுக்கு திரும்பியிருந்தனர். விடுதலைப் புலிகள் "சமாதானம்" மற்றும் "ராகவன்" ஆகிய இரு வகையான புதிய எறிகணைகளை பயன்படுத்தியிருந்தனர்.

இதில் ஒரு எறிகணையில் பொஸ்பரல் துகள்கள் இருந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இம் மோதல்களில் நூற்றுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 348 பேர் காயமடைந்துள்ளனர். 121 பேர் ஜெயவர்த்தனபுர மருத்துவமனையிலும் 10 பேர் கண் மருத்துவமனையிலும் 35 பேர் தேசிய மருத்துவமனையிலும் 40 பேர் கொழும்பு இராணுவ மருத்துவமனையிலும் 128 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கிளிநொச்சியில் இருந்து கிடைத்த தகவல்களின் படி பல படையினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3,000-க்கும் அதிகமான விடுதலைப் புலிகளை கொன்றுவிட்டதாக அரசு தெரிவித்திருந்தது. அதற்கு 6 மாதத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பலம் 3,000 பேர் என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். சிறிலங்காவை பொறுத்த வரையில் போரில் முதலில் மரணத்தை தழுவுவது "உண்மை" தான் என்பது நாளாந்தம் நிரூபணமாகி வருகின்றது.

கடற்படை மற்றும் வான்படையின் ஆதரவுகள் இன்றி இந்நடவடிக்கையை திட்டமிட்டது முட்டாள்த்தனமானது.

இம் முட்டாள்த்தனமான நடவடிக்கையில் படையினர் தமது உயிர்களையும், உடல் உறுப்புக்களையும் இழந்ததுடன், சிறிலங்கா தன் உளவுரனையும் இழந்துள்ளது.

இதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சமந்தா சூரிய பண்டாரா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர், அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் கமல் குணரட்ண யமிக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்திற்கு பிரிகேடியர் பிரசன்னா சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: