தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்து உள்ளனர். வேல்ஸில் உள்ள Newtown, Powys ஆகிய இடங்களில் இருவரும் மூன்றாமவர் லண்டன் மிச்சம் பகுதியிலும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்தாக சிறீலங்கா ஊடகங்கள் செய்தி வெளிவிட்ட நிலையில் இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி சேகரித்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஸ்கொட்லன்ட் யாட் தெரிவிக்கிறது. Newtownல் கைது செய்யப்பட்டவர் 39 வயதுடையவர் என்றும் Powysல் கைது செய்யப்பட்டவர் 46 வயதுடையவர் என்றும் மிச்சம் பகுதியில் கைது செய்யப்பட்டவர் 33 வயதுடையவர் என்று தெரியவருகிறது.
இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பாதுகாப்பு நிறைந்த படிங்ரன்கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சரேயிலும் முற்றுகையும் சோதணையும் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மாதங்களாகின்ற நிலையில் இம்மூவரதும் கைது இடம்பெற்று உள்ளது.
இவர்கள் மீது நிதி சேகரித்தது, ஹைப்பார்க்கில் தமிழீழ விடுதலைக்காக கூட்டத்தை கூட்டியது, இராணுவ உபகரணங்கள் பற்றிய தகவல்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளது.
இன்று (ஏப்ரல் 29) இவர்கள் கைது செய்யப்பட்ட வீடுகள் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு சோதணையிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முற்றுகைக்கு உள்ளான வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கு இச்சம்பவம் பற்றியும் அவர்களது பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் தெரிவிக்கும் பிரசுரங்களை ஸ்கொட்லன்ட் யாட் வழங்கி உள்ளது.
இக்கைதுகள் இன்று காலை 6:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. பொலிஸாரிற்கு இவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து குற்றங்களை பதிவு செய்வதற்கு 28 நாட்கள் உள்ளது. அதற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லையானால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இதற்கிடையே கருணா குடிவரவு விதிகளை மீறியது தொடர்பான வழக்கு மே 10ல் விசாரணைக்கு வருகிறது. மோசடியாக இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வந்த குற்றத்தை ஒத்துக் கொண்டமையால் கருணாவிற்கு 12 மாதச் சிறைத் தண்டனையை நீதிபதி மக்டௌல் ஜனவரி 25 அன்று வழங்கி இருந்தார். நீதிபதி தண்டனையை வழங்கி தீர்பளிக்கையில் இத்தண்டனைக் காலம் முடிவடையும் போது உள்துறை அமைச்சு சிலசமயம் கருணாவை மேலும் தடுத்து வைக்கலாம் என்பதை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மேலதிக குற்றச்சாட்டுகள் சிலவும் பதியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 comment:
don't worry!
Very soon British diplomates will outside Tamileelam entrance,
seeking H E L P !
Post a Comment