Wednesday 30 April 2008

பாம்புக்கு பால் புகட்டும் பெண் : நாகப்பட்டினத்தில் அபூர்வம்

நாகப்பட்டினம்: கொடிய நச்சுப் பாம்பை பாசத்தோடு அள்ளி மடியில் போட்டு, செல்லமாக பால் புகட்டுகிறார் கிராமத்து பெண் ஒருவர். நாகை, நியூ ஆர்ச் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(32); காய்கறி வியாபாரி. கடந்த 28ம் தேதி அதிகாலை அப்பகுதியில் உள்ள மேரி என்பவர் வீட்டில், மூன்றரை அடி நீள நல்லப்பாம்பு ஒன்று, நசுங்கி இறந்து கிடந்தது. தனலட்சுமி தன் வீட்டிற்கு அருகே முனீஸ்வரன் கோவிலில் பாம்பை புதைக்க குழி தோண்டியுள்ளார். அப்போது பாம்பு அசைந்ததால், மகிழ்ச்சியடைந்தவர் பாம்பு முகத்தில் இருந்த புழுக்களை அகற்றி மஞ்சள் அரைத்து பற்று போட்டு சிகிச்சை அளித்தார். மடியில் கிடத்தி, தினமும் சிரெஞ்ச் மூலம் பாம்புக்கு பால் ஊட்டி வருகிறார். மரண விளிம்புக்குச் சென்ற பாம்பு, தனலட்சுமியின் அன்பான கவனிப்பால் உயிர் பிழைத்துள்ளது. தனலட்சுமி அழைக்கும் போது பாம்பு தலையை உயர்த்தி நன்றியோடு பார்க்கிறது. ஆண்களைக் கண்டால் சீறி படமெடுக்கிறது.
இது குறித்து தனலட்சுமி கூறுகையில், "இந்த பகுதியில் யாருடைய வீட்டில் பாம்பு வந்தாலும் அடிக்காமல் என்னை கூப்பிடுவார்கள். பாம்பை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டு விடுவேன். பாம்பைக் கண்டால் பயம் வருவதற்கு பதில் பாசம் தான் வருகிறது. பாம்பை பாசத்தோடு பிடிக்கும் என்னை, பாம்புகள் எதுவும் செய்யாது. முன் ஒருமுறை தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பாம்பு, மைனா குருவியை விழுங்கி விட்டது. நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதை தோளில் தூக்கி வந்தேன். என்னை கண்டு அனைவரும் பயந்தனர். அந்த பாம்பை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது' என்றார். கரப்பான் பூச்சிகளைக் கண்டால் இவர் அலறித்துடித்து விடுவாராம்.

2 comments:

Anonymous said...

//தனலட்சுமி அழைக்கும் போது பாம்பு தலையை உயர்த்தி நன்றியோடு பார்க்கிறது//

அடங்கப்பா, ராமநாரயணன் பட ரேன்சுக்கு உடான்ஸா இருக்கே. பாம்புக்கு காது கே.காது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நாகமென்றபடியால் இப்பெண் சற்று அவதானமாக இருப்ப‌துடன், இதை மிருகக் காட்சிச் சாலைக்குக் கொடுப்பதே சாலச் சிறந்தது.
பாலைவிட எலி,தவளை கொடுப்பது நன்று..