Monday, 28 April 2008

சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்த 2 1/2 வருடங்களில் 9 ஆயிரம் படையினர் பலி-- லக்ஷ்மன் கிரியெல்ல

* யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் பேரழிவு; எச்சரிக்கிறது ஐ.தே.க.

உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் நாடு பேரழிவையே சந்திக்க நேரிடுமென எச்சரித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, யுத்த இழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

சமாதானப் பேச்சுகளை அரசு முறித்துக் கொண்டதன் பிரதி பலன், இரண்டரை வருடங்களில் படைத்தரப்பிலிருந்து 9 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் ஊடக மாநாட்டில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதில் எமக்கு முரண்பாடெதுவும் கிடையாது. பயங்கரவாத நடவடிக்கைகளை எவரும் அனுமதிக்கப் போவதில்லை. ஆனால், இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட யுத்தமாகவே காணப்படுகிறது. இராணுவ நிகழ்ச்சி நிரலின்படி போர் முன்னெடுக்கப்படவில்லை. முற்று முழுதான அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே காணப்படுகிறது.

பட்ஜட்டில் அரசைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு இராணுவ நடவடிக்கை இடம்பெற்றது. அதன் இழப்பு எத்தகையானதாக அமைந்தது என்பதை நாம் மறந்து விட முடியாது . இப்போது கிழக்குத் தேர்தலைப் பயன்படுத்தி கிளாலி , முகமாலைத் தாக்குதலை நடத்தினர் . அதன் பயன் பெருந்தொகையான படையினரை இழக்க வேண்டியேற்பட்டது. சுமார் 200 படைவீரர்கள் பலியானதாகவும் 600 பேரளவில் காயமடைந்ததாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்த சில புள்ளிவிபரங்களை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வடக்கில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கைகளில் டிசம்பர் மாதத்தில் படைத்தரப்பில் 74 பேர் பலியாகி 215 பேர் காயமடைந்தனர். ஜனவரியில் 60 பேர் பலி 500 பேர் காயம். பெப்ரவரியில் 67 பேர் பலி 468 பேர் காயம். மார்ச்சில் 104 பேர் பலி 822 பேர் காயம். கிளாலி முகமாலைச் சம்பவம் வரை 700 பேர் பலியாகி 2450 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் உள்வாங்கப்படவில்லை. எனினும் தமக்குக் கிடைத்த புள்ளிவிபரங்களின்படி இந்த எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு கூடுதலானதாகும்.

சமாதான முயற்சிகள் கைவிடப்பட்டதன் பின்னர் இதுவரையில் ஒன்பதாயிரம் பேர் படைத்தரப்பில் பலியாகியுள்ளனர். அரசாங்கம் தொடர்ந்து உண்மைகளை மறைத்து வருகின்றது. பொருளாதார நெருக்கடி வாழ்க்கைச்செலவு அதிகரிப்பால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில் மக்களை திசை திருப்பும் நோக்கில் யுத்தமாயையே அரசு காட்டிக் கொண்டிருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி இருந்தபோது அரசாங்கம் தென்னிலங்கை உட்பட முழுநாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகவே சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்து சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்தது. சமாதானப் பேச்சுகள் தொடர்ந்திருந்தால் இன்றைய அழிவை நாடு எதிர்கொண்டிருக்க முடியாது.

அதுமட்டுமல்ல இராணுவ இரகசியங்கள் கூட பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றன. போர் நடவடிக்கைகளை முன் கூட்டியே பாதுகாப்புத் தரப்பு சில ஊடகங்களுக்கு வழங்குகிறது. அதற்குப் போதுமான ஆதாரங்கள் பல ஊடகங்களிலிருந்து வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை குறித்தோ யுத்த முன்னெடுப்பு தொடர்பாகவோ அரசாங்கத்திடம் தெளிவான திட்டமெதுவும் காணப்படவில்லை. சகலதும் அரசியல் மயப்பட்டதாகவே காணமுடிகிறது. திட்டமிடப்படாத போர் முன்னெடுப்பு மேலும் தொடருமானால் நாடு பேரழிவையே சந்திக்க வேண்டி வரலாம். அந்த அழிவுக்குப் பின்னர் அரசியல் தீர்வு பற்றிப் பேசி என்ன பயன் கிட்டப் போகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

No comments: