Wednesday 30 April 2008

‘Journalist are nescessary evils. - ஊடகவியலாளர்கள் அவசியமான பேய்கள்.’ லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாடு

தமிழ் செய்தியாளர் ஒன்றியம் - International Assosiation of Tamil Journalist - IATAJ, ஏப்ரல் 26ல் தனது வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. Media & Sri Lanka’s Conflict: Where is the truth? - ஊடகமும் இலங்கை முரண்பாடும்: எங்கே உண்மை என்ற தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்றது.

”இலங்கையில் இனமுரண்பாடு மீண்டும் வீச்சடைந்ததைத் தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கொலை செய்யப்டுகிறார்கள்” என இம்மாநாடு தொடர்பாக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் வெளியிட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, ”எப்போதும் இல்லாத அளவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அச்சமும் யுத்தமும் உண்மைச் செய்திகளை கொண்டுவருவதை இயலாமல் செய்திருக்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு நீண்டகாலமாக உணரப்பட்டு இருக்கின்றது. முக்கியமாக ஊடகங்கள் இனரீதியான, மத ரீதியான கோடுகளால் பிளவுபட்டு உள்ளது. ஊடகத்தின் செய்திகளும் ஆசிய நிலைப்பாடுகளும் வௌ;வேறு சமூகங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்றாற் போல் வேறுபடுகிறது. நிலைப்பாடுகளை கட்டமைக்கிறது. இதன் காரணமாக ஊடகங்களும் முரண்பாட்டின் ஒருபகுதியாகின்றன” என தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கையேடு தெரிவிக்கின்றது.

ஐவன் பீதுருப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இம்மாநாடு ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. அதற்கு முன் மங்கள விளக்கேற்றி இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஏனையோருக்கும் இரு நிமிட ஆஞ்சலி செலுத்தப்பட்டது.

IATAJ Conferenceஇலங்கைத் தமிழ் ஊடகங்களின் வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழர் தகவல் ஏட்டின் ஆசிரியரும் ஐபிசி வானொலியின் ஆரசியல் ஆய்வாளருமான திருச்செல்வம் உரையாற்றினார். வேறு காலகட்டங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வரலாற்றினூடாக தொட்டுக்காட்டினார். அவரைத் தொடர்ந்து தமிழ் ஊடகங்களின் இன்றைய நிலை பற்றி யாழ் உதயன் மற்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் என் வித்தியாதரன் உரையாற்றினார். அவர் உதயன் பத்திரிகையின் செய்தியாளர்கள் உட்பட உதயன் பத்திரிகைக் குழுவினர் மீதான தாக்குதல்கள் கொலைகள் இவற்றினூடாக தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகளை விபரித்தார்.

‘இலங்கையின் இனமுரண்பாட்டில் சிங்கள ஊடகங்களின் பாத்திரம்’ என்ற தலைப்பில் பிபிசி சந்தேசயா சிங்கள சேவை ஊடகவியலாளர் சந்தன பண்டார உரையாற்றினார். இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். சிங்கள மக்களும் இன்றைய உண்மை நிலவரங்களை அறியாதவர்களாகவே உள்ளதாகக் குறிப்பிட்ட பண்டார, ”தமிழ் சிங்கள (ஆங்கிலம் உட்பட) ஊடகங்கள் மக்களுக்கு உண்மைத் தகவல்களை கொண்டு செல்வதில்லை” என்று தெரிவித்தார். யுத்தத்தில் ஈடுபட்டு உள்ள இரு தரப்பினருமே ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை மேற்கொள்வதையும் பண்டார சுட்டிக்காட்டினார்.

ஒரு பேப்பர் பாலாவின் கேள்விக்குப் பதிலளித்த பண்டாரா, ”மற்றவர்கள் என்ன கூறுகிறார்களோ அதைக் கேட்டு சொல்வதைத் தான் ஊடகவியலாளன் செய்கிறான்” என்றும் ”பேச்சுவார்த்தைகள மூடிய கதவுகளுக்குப் பின் நடைபெறுகிறது. ஒருதரப்பினர் வந்து சொல்கிறார்கள் எல்லாம் சுமுகமாக நடந்தது என்று. மற்றைய தரப்பு வந்து சொல்கிறது நாங்கள் இனி பேசத் தயாரில்லை என்று. இதுதான் பிரச்சினை. அவர்கள் பேசும்போது நாங்கள் அங்கு இல்லை. அவர்கள் சொல்வதைத்தான் ஊடகவியலாளன் சொல்ல முடியும்” என்றார் அவர்.

”பிபிசியிடம் எவ்வித தணிக்கைக் கொள்கைகளும் இல்லை” என மற்றுமொருவரின் கேள்விக்குப் பதிலளித்த பண்டார, ”தென்னாபிரிக்க அமைச்சர் பொதுமேடையில் சுயநிர்ணய உரிமை பற்றிச் சொல்லி இருக்கலாம் ஆனால் எங்களிடம் அதனைச் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

”மேற்கு ஊடகங்கள் எப்போதுமே ஒரு பக்கச்சார்பாகவே நடந்துகொள்கின்றன, முக்கிய விடயங்களில் இலங்கைத் தூதரகத்தின் கருத்துக்களை மட்டுமே கேட்டு வெளியிடுகின்றன” என ஒருவர் குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்த பண்டார, ”அரச தரப்பில் கருத்துச் சொல்ல இலங்கைத் தூதரகம் உள்ளது. தமிழ் மக்கள் சார்பான கருத்துக்கு எங்கே செல்வது. தமிழ் தரப்பை கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால் அன்ரன் பாலா இருக்கும் போதும் நாங்கள் அழைத்தால் அவர் அக்கறை எடுப்பதில்லை” என்றார் பண்டார.

பண்டார தனது பதில்களை மிகவும் அவதானமாக அரசியல் ரீதியாகவும் ஊடகவியலாளனாகவும் என்று சொல்லி தப்பிப்பதாகக் குற்றம்சாட்டிய ஒருவர், மற்றைய தரப்பில் இருந்து வந்திருக்கும் பண்டார, தமிழ் மக்களுடைய நிலை பற்றிய தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தை தெரிவிக்க வேண்டும் என அடம்பிடித்தார். அதற்குப் பதிலளித்த பண்டார, ”சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தன்னை பிபிசி ஊடகவியலாளனாகவே அழைத்து இருப்பதாகவும் பிபிசி ஊடகவியலாளர்கள் தங்கள் சொந்தக் கருத்தை வெளியிட அனுமதிப்பதில்லை” எனவும் தெரிவித்தார். இருப்பினும் தான் பதிலளிப்பதாகக் கூறிய பண்டார, ”இலங்கையில் யுத்தம் ஒன்று நடைபெறுகிறது. அரசாங்கம் யுத்தத்தை நடத்துகிறது. தமிழ் சிங்கள சமூகங்கள் அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து சமூகங்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

நீங்கள் என்னை கேட்கிறீர்கள் நான் தமிழர்களுக்கு அனுதாபமற்றவனா என்று, மறுபக்கம் உள்ள என்னுடையவர்கள் கேட்கிறார்கள் நான் நம்பிக்கைத் துரோகியா என்று. இது ஊடகவியலாளனுக்கு உள்ள பிரச்சினை. நான் தேசப்பற்றாளனாக இருப்பதா? (தமிழர்களுக்கு) அனுதாபியாக இருப்பதா?”, என்று பதில் கேள்வி எழுப்பினார் பண்டார.

‘இலங்கை தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைபு International Federation of Journlist - IFJ - IFJஇன் நிலை’ பற்றி றேச்சல் கோகின் உரையாற்றினார். இலங்கை நிலவரம் பற்றி தன்னிலும் அதிகம் அறிந்து வைத்துள்ளவர்கள் இருப்பதால் தான் அது பற்றி குறிப்பிடத் தேவையில்லை என்று குறிப்பிட்ட றேச்சல் இலங்கையில் நடைபெறும் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஐஎப்ஜே ஜனாதிபதிக்கு எழுதி உள்ளதாகவும் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் பற்றி அதிகம் அக்கறை காட்டப்படுவதால் அவர்கள் யாருக்கும் மேலானவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட றேச்சல் ஆனால் அவர்கள் மிகவும் அவசியமானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். இக்கருத்தினை தலைமை வகித்த பீதுருப்பிள்ளையவர்களும் ”Journalist are nescessary.” என்று சுட்டிக்காட்டினார்.

Mike Jempson‘முரண்பாடுகள் பற்றிய செய்தியாக்கத்தின் ஊடக விழுமியங்கள் : மற்றய குரலுக்கும் இடம் வழங்கல்’ என்ற தலைப்பில் The MediaWise Trust அமைப்பின் இயக்குநர் மைக் ஜெம்சன் உரையாற்றினார். Journalist are nescessary evils என்று சிலர் குறிப்பிடுவார்கள் என தனது உரையை ஆரம்பித்த மைக் ஜெம்சன் உலகிலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னிலை வகிக்கும் இலங்கையில், அவ்வாறான தாக்குதல்கள் எவ்வாறு செய்தியாக்கம் செய்யப்படுகிறது என்பது முக்கியமானது என்றார்.

”முரண்பாடுகளைச் செய்தியாக்கம் செய்வது ஹொலிவூட் தாக்குதல் போல் சுவாரஸ்யம் தருவதில்லை” என்று குறிப்பிட்ட மைக் ஜெம்சன், ”தற்கொலைக் குண்டுத் தாக்குதலை விபரிக்கும் போது, அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பற்றி சொல்வது, அதில் தப்பியவர்கள் பற்றிச் சொல்வது, அந்த தாக்குதலை நடத்தியவர்(கள்) பற்றிச் சொல்வது. அவர்களது அரசியல் பற்றிச் சொல்வது. அவசியம். இதில் ஊடகவியலாளர்கள் பெரும்பான்மையினரின் பக்கம் சார்ந்தே செய்தியாக்கம் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இங்கு பிரித்தானியாவில், வட அயர்லாந்து பிரச்சினையில் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு பலமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய மைச் ஜெம்சன், ”எவ்வாறு செய்திகள் பெறப்பட்டாலும் இறுதியில் பாதுகாப்பு அதிகாரிகளினூடாகவே செய்திகள் வெளிவருகிறது என்றும் உண்மைச் செய்திகள் வெளிவருவதில்லை” என்றும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ”இலங்கையில் உள்ள மக்களுக்கு பொதுவான மொழி என்று இல்லாதபடியால் மற்றைய தரப்பினர் பற்றி அறியாதவர்களாகவே இருக்கின்றனர். தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளிக்கொண்டு வந்து எல்லோரும் அறியத்தருவது அவசியமானது” என்றார்.

Suthaharan Nadarajahமாலை அமர்வு தமிழ் கார்டியன் பத்திரிகையின் துணை ஆசிரியை செல்வி வினோதினி கணபதிப்பிள்ளையின் தலைமையில் இடம்பெற்றது. மாலை அமர்வில் முதலில் உரையாற்றிய தமிழ் கார்டியன் ஆசிரியர் சுதா நடராஜா, ‘இலங்கையின் சுயமொழி ஊடகங்கள்’ பற்றி உரையாற்றினார். அவர் தனது உரையில் ஊடகங்கள் தகவல்களை மட்டும் எடுத்துச் செல்வதில்லை கருத்தியல்களையும் உருவாக்குவதாகக் சுட்டிக்காட்டினார். சிங்கள ஊடகங்களின் செய்தித் திரிபுகள் பற்றி சுட்டிக்காட்டி தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் சரியான முறையில் செய்திகளை வெளியிடுவதாக நிறுவ முயன்றார். இலங்கையில் உள்ள ஒவ்வொரு இனங்களும் தங்களுக்குள் தேசியவாத இயல்புகளை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சுதா நடராஜா, ஊடகங்கள் அந்தக் கோட்டிலேயே பயணிப்பதாகத் தெரிவித்தார்.

Pirabaharan Balasingamஅவரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட இன்பத் தமிழ் வானொலி பணிப்பாளர் பிரபாகரன் பாலசிங்கம், பல்கலாச்சாரத்தை பின்பற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் ஊடகங்கள் பற்றிய அறிமுகத்துடன் தனது உரையை ஆரம்பித்தார். அவர் ஈழமுரசு, உதயம் பத்திரிகைகள், இன்பத் தமிழ் வானொலி, மற்றுமொரு 24 மணிநேர வானொலி இயங்குவதாகக் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் ஊடகவியலாளர்கள் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரண்பட்ட தகவல்களை வெளியிட்டார். ஊடகவியலாளன் ஒரே சம்பவம் தொடர்பாக வேறு வேறு தரப்பினரிடம் இருந்து தகவல்களைப் பெற்று செய்தியை வெளியிடுவது பொறுப்பான செயல் அல்ல என்று குறிப்பிட்ட பிரபாகரன் ஊடகவியலாளன் தான் ஒரு முடிவை எடுத்து அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

அதனை மைக் ஜெம்சன் நிராகரித்தார். மக்கள் மிகவும் விழிப்பானவர்கள் என்றும் கொடுக்கப்படும் தகவல்களில் இருந்து அவர்களே ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றும் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

சுதா நடராஜா போன்று பிரபாகரனும் தமிழ் ஊடகவியலாளர்கள் தக்க முறையில் செய்திகளைப் பதிவு செய்வதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அவுஸ்திரேலிய நேயர்கள் வேறு இணையங்களில் வரும் செய்திகளையும் தங்கள் வானொலியின் நம்பகத்தன்மை காரணமாக அதனூடாகவே கேட்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

‘குற்றவாளிகளாக்கப்படும் சமூகங்கள்’ என்ற தலைப்பில் ஜஸ்ரின் ரான்டோல் உரையாற்றினார். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் எவ்வாறு பிரித்தானியாவில் உள்ள சமூகங்களை குறிவாளிகள் ஆக்குகிறது என்பது பற்றி விபரித்தார்.

Asst Prof Cheranமாநாட்டில் இறுதியாக ‘கலாநிதி’ சேரன், ‘ஆபத்தில் தமிழ் ஊடகவியல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ”இலங்கையில் இன்றைய யுத்தம் பற்றியே கூடுதலாக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இன்று இலங்கை தனது சுற்றுச் சூழலை கையாள்வது போல் தொடர்ந்தும் செய்தால், இன்னும் 20 வருடத்தில் இலங்கை மிக மோசமான சூழலை எதிர்நோக்கும் என்கிறார் ஐநா சுற்றுச் சூழல் அதிகாரி. நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நான் தமிழ் ஊடகம் பற்றிய வேறொரு பார்வையை முன்வைக்கப் போகிறேன். விமர்சனத்தூடான ஒரு மதிப்பீடு.” என்ற முகவுரையுடன் சேரன் தனது உரையை ஆரம்பித்தார்.

”உண்மையை கண்டறிவது. சரியான உண்மையை அறிவது. நேரடியாக உண்மையை அறிவது. தகவலைப் பெறுவது. என்ன உண்மை? இதில் நான் எச்சரிக்கிறேன். தகவல் என்பது வரலாற்றுரீதியாக கட்டமைக்கப்பட்டது, சமூகத்தால் தயாரிக்கப்படுவது, அரசியல் ரீதியாக கையாளப்படுவது. இதனை வளங்கிக் கொள்ளாது விட்டால் தவறாகிவிடும். உண்மை என்பது தகவல்கள் மட்டுமல்ல. தகவல்கள் மட்டும் என்றால் அது போதாது. அதற்கு உணர்வு ரீதியான உரிமைகோரல் இருக்க வேண்டும். யுத்த சூழலில் முரண்பாடுகள் நிறைந்த சூழலில் அது மிகவும் முக்கியமானது.

ஒரு ஊடகவியலாளனாக, ஒரு படைப்பாளியாக, சமூகநீதிக்காக செயற்படும் கல்வியாளனாக எனது தத்துவார்த்த அரசியல் பொறுப்பு என்பது நான்கு விடயங்களில் தங்கி உள்ளது.
1. உண்மையை பேசும் கட்டாயம்
2. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உண்மையைப் பேசுவது
3. மற்றவர்களுக்கு பொறுப்பாக இருத்தல் (மற்றவர்கள்: மற்றைய சமூகங்கள், மற்றைய தத்துவங்கள், …)
4. ஊடகவியல் என்பது ஒரு தொழில் அல்ல. அது ஒரு தொழில்நுணுக்க பொறுப்பும் அல்ல. விழுமியங்களுக்கான பொறுப்பு.

தமிழ் ஊடக விழுமியங்கள் பற்றி சற்று விரிவாக பார்கும் போது
1. தொழில் பயிற்சியின்மையின் போதாமை
2. இணைய ஊடகங்கள் உட்பட்ட ஊடகங்களில் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமையில் உள்ள போதாமை
3. பொருளடக்கத்தில் விடப்படும் தவறுகள்: தேவையற்ற அழுத்தம், பிழையான திகதி, நேரம், இடம், தகவல்
4. ஊடகவியலில் ஊகத்திற்கு இடமளிக்கக் கூடாது. ஆனால் தமிழ் ஊடகங்களில் இது தொடர்கிறது.
5. கருத்துக்களையும் தகவல்களையும் சேர்த்து குழப்புவது தவறானது. வானொலி தொலைக்காட்சிகளில் இது பொதுவான குறைபாடாக உள்ளது.
6. எப்போதும் மீள் மதிப்பீடு செய்வது ஊடக விழுமியங்களுக்கு பொறுப்பாக இருப்பதற்கான முக்கிய அம்சமாகும். நிபுணத்துவ கருத்துக்களை பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால் தமிழ் ஊடகவியலில் இப்பிரச்சினை பெரிதாக இல்லை. ஏனென்றால் தாங்கள் எல்லோரும் நிபுணர்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

தமிழ் ஊடகங்களில் ஆறு முக்கிய அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
1. நாங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ் பத்திரிகைகளில் தான் அந்த மொழி பற்றிய எவ்வித அறிவும் இல்லாத ஒருவர் ஆசிரியராக இருக்க முடிகிறது. அப்பத்திரிகையை நான் இங்கு இனம்காட்ட விரும்பவில்லை.

2. முக்கியமானது சுயதணிக்கை. ஊடகவியலைப் பொறுத்தவரை சுயதணிக்கை எப்போதுமே பிரச்சினையானது.

3. தேசியப்பற்று. இது எப்போதும் தவறானது என்றல்ல. ஆனால் அதன் எல்லைகள் ஊடக விழுமியங்களின் எல்லைகளை மீறுகின்றது. இது தமிழ் ஊடகவியலில் பெரும் பிரச்சினையாக உள்ளது.

4. ஊடகவியல் வர்த்தக மயப்படுத்தப்படுவதும் சினிமா மயப்படுத்தப்படுவதும்.

5. மிக முக்கியமானது ஊடக விழுமியங்கள். நாங்கள் ஊடகவியலின் உண்மைத் தன்மையை உயர்த்திப் பிடிக்கப் போகிறோமோ? அல்லது எங்களது நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கப் போகிறோமா? என்பது. முரண்பாடு கூர்மையடைந்துள்ள யுத்த சூழலில் இது மிக முக்கியமானது. கருத்துச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் உண்மையான ஜனநாயகத்திற்கு எந்தச் சூழ்நிலையிலும் மிக அவசியமானது என்றே நான் வாதிடுவேன். இது இல்லாமல் உண்மையான ஜனநாயக சமூகத்தை உண்மைத் தகவல்களை அறிந்த சமூகத்தை பார்க்க முடியாது.

6. எங்களிடம் எதிர்வினை இருப்பதில்லை. நாங்கள் ஆசிரியர் பகுதிக்கு எழுதுவதில்லை. நாங்கள் ஊடகங்களை இருவழித் தொடர்பு ஊடகமாக பயன்படுத்துவதில்லை.

இவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ளாது விட்டால் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்போம். நாங்கள் வருமுன் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் முன்னோக்கி நகர்வதாக இருந்தால் ஊடகவியலின் அடிப்படைகளை கடைப்பிடிக்க வேண்டும்.” என்று கூறி தனது உரையை சேரன் நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து சர்வதேசத் தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி ஆனந்தி சூரியப் பிரகாசம் நன்றியுரை வழங்கினார். இறுதியாக கேள்வி நேரம் இடம்பெற்றது. வழமை போல் கேள்வி நேரம் சுவாரஸ்யமாக அமைந்தது.

No comments: