Tuesday 29 July 2008

சிறிலங்கா கடற்பரப்புக்கு வந்துள்ள இந்திய யுத்தக்கப்பல்களில் 1,000 கடற்படையினர்

 கொழும்பில் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக வருகைதரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பை வழங்குவதற்காக கொழும்பையடுத்துள்ள கடற்பிராந்தியத்துக்குள் பிரவேசித்துள்ள இந்தியாவின் மூன்று யுத்தக் கப்பல்களில் சுமார் ஆயிரம் இந்தியக் கடற்படையினர் இருப்பதாகவும், குறிப்பிட்ட கப்பல்களுடன் இணைந்ததாக 30 தாக்குதல் படகுகள் வந்திருப்பதாகவும் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்கள் நேற்று சிறிலங்காவின் கடற்பிராந்தியத்துக்கு அப்பால் வந்து தரித்து நிற்பதாக அறிவிக்கப்படுகின்றது.

இக்கப்பல்கள் சிறிலங்காவின் கடற் பிராந்தியத்தக்குள் பிரவேசிக்காது எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே இந்தக் கப்பல்கள் நடவடிக்கைளில் இறங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இல்லையெனில் கொழும்பு வந்திருக்கும் இந்தியத் தூதுக்குழுவினர் முழுமையாகத் திரும்பிச் செல்லும் வரையில் இக்கப்பல்கள் தொடர்ந்தும் தரித்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கப்பல்களில் தாக்குதல் உலங்கு வானூர்திகள் சில தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அவசர தேவைகளின் நிமித்தம் இதனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான விமானப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதனைவிட இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மேலும் மூன்று உலங்கு வானூர்திகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்த சேர்ந்துள்ளன. இந்தியப் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களின் பிரயாணத்துக்கு இது பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: