Thursday 31 July 2008

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: அமைச்சர்கள் குழுவிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள்

உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமய விவகாரங்கள் அமைச்சர் பந்து பண்டார தலைமையில், அமைச்சர்களான மில்ரோய் பெர்னான்டோ, பீலிக்ஸ் பெரேரா, திஸ்ஸ கரலியத்த, ஜயதிஸ்ஸ திசேரா மற்றும் சரரணவந்த ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை மன்னார் சென்று மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

மடு மாதா ஆலயத்தின் பிந்திய நிலைவரம் குறித்து அமைச்சர்கள் குழு கேட்டறிந்துகொண்டதாக மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், அவர்கள் தங்குவதற்கு கூட இடமின்றி மரங்களின் கீழ் தங்கியிருக்கும் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர்களிடம் தான் சுட்டிக்காட்டியதாக மன்னார் ஆயர், பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியிருந்தார்.

அவர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் தங்குமிட வசதிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் தடைசெய்யக் கூடாதெனவும் அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்திருந்தார். இடம்பெயர்ந்தவர்களுக்கான உரிய உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தசூனியப் பிரதேசமாக இரு தரப்பும் உறுதிமொழி வழங்கினாலே மடு உற்சவத்தை நடத்த முடியும்

மடுப் பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் அதனைப் புனரமைத்து தம்மிடம் ஒப்படைக்க இராணுவத்தினர் முன்வந்துள்ள போதும், விடுதலைப் புலிகளும், இராணுவத்தினரும் மடு தேவாலயம் அமைந்திருக்கும் பகுதியை யுத்தசூனியப் பிரதேசமாக ஏற்று அந்தப் பகுதியில் மோதல்கள் இடம்பெறாதென பாதுகாப்பு உறுதிமொழி வழங்கினாலே ஆகஸ்ட் மாத உற்சவத்தை நடத்தமுடியும் என அமைச்சர்கள் குழுவிடம் எடுத்துக் கூறியதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பி.பி.சி.க்குக் கூறியிருந்தார்.

எனினும், மடு தேவாலயப் பகுதியின் பாதுகாப்பை இராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளபோதும், இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருப்பதாக ஆயர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கென அமைச்சர்கள் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் 5 இலட்சம் ரூபா நிதியையும் கையளித்துள்ளது.

No comments: