Thursday 31 July 2008

சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டுறவு உடன்படிக்கை: விரைவில் கைச்சாத்து

சிறிலங்காவுடன் பாகிஸ்தான் பாதுகாப்புக் கூட்டுறவு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடவிருப்பதாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த பாதுகாப்பு கூட்டுறவு உடன்படிக்கைக்கான நகல் திட்டம் ஒன்று பாகிஸ்தானால் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இரு தரப்பினரும் இது தொடர்பாக ஆராய்ந்து வெகு விரைவில் இவ்வவுடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக கொழும்பு வந்திருக்கும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்டும் ஷா மஹமூட் குவெஷி இது தொடர்பாக தெரிந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

பாதுகாப்பு உடன்படிக்கைக்கான நகல் திட்டம் சிறிலங்கா அதிகாரிகளுடைய பரிசீலனைக்காக இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா நெருக்கடிகளை மற்றும் சவால்களை எதிர்கொண்டிருந்த தருணங்களில் பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு சார்ப்பாகவே இருந்துள்ளது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவுக்கான ஆயுத மற்றும் பயிற்சி வசதிகள் உட்பட அனைத்து வகையான பாதுகாப்பு உதவிகளும் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: