Wednesday 30 July 2008

சார்க் மாநாட்டில் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆராயத்திட்டம்?

கொழும்பில் நடைபெறும் 15வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், சார்க்கில் அங்கம்வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகத் தெரியவருகிறது.

சார்க் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில், தற்போதைய அங்கத்துவ நாடுகளிடையே கருத்துவேறுபாடுகள் நிலவுவதாகவும், இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய முடியும் என சில நாடுகள் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சார்க் பிராந்தியத்திற்கு அயலிலுள்ள, பார்வையாளர் அந்தஸ்த்தைப் பெற்றுள்ள சில நாடுகள் சார்க் அமைப்பில் முழு அளவிலான அங்கத்துவத்தைப் பெற விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அயல்நாடுகளை இணைத்துக்கொள்வது சார்க் சாசனத்துக்கு முரண்படாது என சில நாடுகள் கருதுகின்றபோதிலும், அவ்வாறு இணைத்துக் கொள்வது சார்க் அமைப்பின் தெற்காசியா எனும் தனித்துவத்தை அற்றுப்போகச் செய்துவிடும் என சிலர் கருதுவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்களது கூட்டத்தின் தலைவராக பாலித கோஹன

இதேவேளை, சார்க் மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்களது கூட்டத்தின் தலைவராக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில், வெளிவிவகார அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்ட வறுமை ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைவர்கள் வருகை

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் சார்க் நாடுகளின் தலைவர்கள் எதிர்வரும் 31 ஆம், 01 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி ஆகியோர் விசேட விமானங்கள் மூலம் ஆகஸ்ட் 01ஆம் திகதி இலங்கை வருவார்கள் என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்மா மாநாடு இன்று ஆரம்பம்

தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (சப்மா) நான்காவது மாநாடு இன்று புதன்கிழமை மாலை கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.

'நெருக்கடியான சூழலில் பத்திரிகை சுதந்திரம்' எனும் தலைப்பில் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சுமார் 150 வெளிநாட்டு ஊடகவியலாளர்களும், 50 உள்ளூர் ஊடகவியலாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.

மாநாட்டின் இறுதி அமர்வில், சப்மாவின் செயலாளர் இம்தியாஸ் அலாமினால் கொழும்பு பிரகடனம் வெளியிட்டுவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: