Monday 28 July 2008

பொலிஸாரால் தாக்கப்பட்டதாக மட்டக்களப்பு ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

ஆகியோரை சந்தித்து தமது நிரந்தர நியமனம் தொடர்பாக மனுக்களை கையளிப்பதற்காக மட்டக்களப்பு நகரில் கூடியிருந்த அரசாங்க பாடசாலைகளின் தொண்டர் ஆசிரியர்கள் சிலர் பொலிசாரால் தாக்கப்பட்டு கலைக்கப்பட்டதாக மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இம்மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கல்வி அமைச்சர் இன்று மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார்.

அமைச்சரின் வருகையையொட்டி மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான அருளையா மோகனராஜ் கூறுகிறார்.

அந்த இடத்தில் கூடி நிற்பதற்கோ அங்கிருந்து அமைச்சர் கலந்துகொள்ளும் வைபவம் நடைபெற்ற இடத்திற்கு செல்வதற்கோ தங்களுக்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அங்கு கூடியிருந்த தொண்டர் ஆசிரியர்களை பஸ் ஒன்றில் ஏற்றி பொலிசார் பலவந்தமாக அனுப்பிவைத்ததாகவும அவர் கூறுகின்றார்.

தான் உட்பட 4 தொண்டர் ஆசிரியர்கள் கைதாகி தடுத்து வைக்கப்பட்டபோதிலும் மாகாண சபை உறுப்பினரொருவரின் தலையீட்டையடுத்து பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் பொலிசார் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசூரிய பொலிசார் தொண்டர் ஆசிரியர்களுடன் பேசியதையடுத்து சுமூகமான முறையில் அவர்கள் கலைந்து சென்றதாகவும், சங்க பிரதிநிதிகள் குழுவொன்று கல்வி அமைச்சரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

No comments: