Sunday 27 July 2008

சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்


தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


சிறிலங்கா கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ம.தி.மு.க. கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொருளாளரும், சட்டசபை உறுப்பினருமான மு.கண்ணப்பன் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.

உண்ணாநிலைப் போராட்ட பந்தலில் வைகோ உரையாற்றிய போது, "அடுத்து வரும் தேர்தலில் மத்தியில் அ.தி.முக. கூட்டணி ஆதரவு பெற்ற அரசு தான் அமையும். அதன்பின்னர் கச்சதீவை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம். சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும்,

கடற்றொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும் அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் வாளும், கேடயமாக முன்நின்று செயல்படுவோம்" என்றார்.

மாலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் முத்துசாமி உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து வைகோ மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பழச்சாறு வழங்கினார்.

முன்னதாக உண்ணாநிலைப் போராட்டப் பந்தலில் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"உலகத்தில் எந்தவொரு தேசத்திலும், அந்நிய நாட்டு இராணுவத்தால் பாதிப்பு ஏற்பட்டால் எதிரி நாடாக இருந்தால் எச்சரிப்பார்கள் இல்லையேல் எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள்.

உறவு நாடாக இருந்தால் உறவை முறித்துக்கொள்வதாக அறிவிப்பார்கள். ஆனால் உறவு நாடான சிறிலங்கா, இந்த அளவுக்கு தாக்குதல் நடத்தியும் கூட இதுவரை மத்திய அரசால் எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.

தங்கச்சிமடம் கடற்றொழிலாளர் சந்தியாகு சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது அவரது வீட்டுக்கு சென்றேன். அங்குள்ள பெண்கள் கதறியழுது, "கடல் ஆமைக்கு கொடுக்கும் பாதுகாப்பு கூட கடற்றொழிலளர்களுக்கு தருவதில்லை.

எங்கள் உயிர் அவ்வளவு கேவலமாக போய்விட்டது" என்று கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கச்சதீவு ஒப்பந்த சரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தமிழக கடற்றொழிலாளர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்கவும், ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா தவறி வருவதால் அந்நாட்டுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்.

தற்போது இந்திய கடற்படை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடுக்கடலில் சிறிலங்கா கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் சுடப்பட்டால், அது குறித்து உடனே இந்தியக் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால்,

உச்சிப்புளியிலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி சென்று, காயம் அடைந்த கடற்றொழிலாளரை மீட்டு உடனடியாக திருச்சிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினர் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சுடுவதை தடுப்பதை விட்டுவிட்டு, சுடப்படுகிற கடற்றொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்க முன்வருவது வெட்கக்கேடான செயல். கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கச்சதீவை மீட்பது தான்" என்றார் அவர்.

1 comment:

ttpian said...

¯Ä¸¢ý ±ý¾ ¦¸¡õÀÛõ ¾Á¢ú ®Æõ
«¨ÁŨ¾ ¾Îì¸ ÓÊ¡Ð