Wednesday 30 July 2008

அண்ணன் ஆனந்தசங்கரிக்கு யு.எஸ்.ஏ. யில் ஓய்வெடுப்பதற்கு ஓர் பொன்னான வாய்ப்பு!


அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு,

நீங்கள் நீண்ட நெடுங்காலமாக சொர்க்கத்துக்கு கடிதம் எழுதி, பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆகையால், தங்களின் மன ஆறுதலுக்காக, இந்தப் பதிலையும் ஆலோசனைகளையும் தெரிவித்து எழுதியுள்ளோம். இது தங்களுக்கு உகந்த ஆலோசனையாக இருக்கும் என்ற நிறைவுடன் இதை எழுதுகின்றோம்.

ஐயா, நீங்கள் பல கடிதங்களை எழுதி சிங்களப் பத்திரிகைகளுக்கும் கூலிக்கு வேலை செய்யும் சில ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கிறீர்கள். பல தடவைகளில் உங்கள் கடிதங்களை சிங்கள மக்கள் பாராட்டியுள்ளார்கள்.

“நாட்டையும் மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்” என்று (28-07-2008) ஆரம்பித்துள்ளீர்கள் உங்கள் கடிதத்தில் யாரால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்று குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி ராஜபக்சே உங்களை அழைத்து கடிதம் எழுதும்படி நிச்சயமாக கட்டாயப்படுத்தியிருக்கமாட்டார். உங்களால் யாருக்குமே எந்தப்பயனும் இல்லை. உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் இப்போது பயன் கிடைப்பதாக அறிகிறோம்.

கடிதம் எழுதுவதுதான் தங்களது இப்போதைய தொழில். பல கடிதங்கள் எழுதியதும் ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு வருவது இப்போது தாங்கள் கடைபிடித்து வரும் புதிய கொள்கையாக உள்ளது.

முன்னர் உலகெமெல்லாம் சுற்றிவரும் “உலகம் சுற்றும் வாலிபனாக” இருந்தீர்கள். இப்போது வெறும் ஐரோப்பாவை மட்டும் சுற்றிப்பார்க்கிறீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை நழுவ விடக்கூடாது. இனி ஒரு வாய்ப்பு இதுபோல் அமையப் போவதில்லை. இந்த வாய்ப்பு ஆண்டவனுக்கு அடுத்தபடியானவரால் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதனை இறுகப் பற்றிக்கொள்ளவும்.

கடைசிக் காலத்தில் கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் அறிவுரை கூறினாலும் எருமை மாட்டில் நல்ல தண்ணீரை ஊற்றியது போன்று எடுத்துக் கொள்வீர்கள். அதனால் பயன் ஒன்றும் ஏற்படபோவதில்லை.

ஆயினும் செய்தித் தாள்கள் மூலம் தங்களை, “சிறந்த நியாயவாதி” போன்று காண்பிப்பதுதான் எங்களை பதிலளிக்கத் தூண்டுகிறது. இந்தப் பதிலுக்காக சிறிதளவு நேரத்தை வீணடிக்கவேண்டியுள்ளது.

கண்ணிவெடி, சிலிப்பர்கட்டை, விதவைப் பெண்கள், கல்வி, பொதுச்சொத்து, பிச்சைக்காரர், சிங்கள மகாவித்தியாலயம், மற்றும் வடக்கில் சிங்கள உறுப்பினர்கள் இல்லாமல் போனது ஆகிய எல்லாவற்றுக்கும் பொறுப்பு தம்பி பிரபாகரன்தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

தம்பி பிரபாகரனைப் பார்ப்பதற்கு கிளிநொச்சிக்குச் சென்றீர்கள் ஞாபகமிருக்கிறதா? சிலிப்பர் கட்டையிலா சென்றீர்கள்? சிங்கள மகாவித்தியாலயத்தை திறந்துவைக்கும்படி பிரபாகரனிடம் கேட்டிருக்கலாமே?

அண்ணன் ஆனந்த சங்கரி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையும் போது யாழ்ப்பாணத்தில் எத்தனை சிங்கள உறுப்பினர்கள் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

அப்படியென்றால், திரு. செல்வநாயகம் அவர்களின் கோரிக்கையினால்தான் சிங்களவர் வடக்கைவிட்டுச் சென்றிருக்க வேண்டும். அப்படியாயின் செல்வநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் எதற்காக இணைந்தீர்கள்?

அப்படி இணைந்தால்தான் எம்.பி. பதவி கிடைக்கும். பதவிக்காக கூட்டணியில் சேர்ந்ததை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள்!

எந்த அளவுக்கு தமிழரையும், தமிழீழத்தையும் இழிவுபடுத்தி அறிக்கை விடுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு சிங்கள அரசிடமிருந்து பல சலுகைகள் கிடைக்கும். இதுவரை நீங்கள் செய்து வந்த இரகசியத் துரோகத்தனத்துக்கு பல விமானச் சீட்டுகளையும் ராஜதந்திரிக்கான பாஸ்போர்ட்டும் சில கோடி பணமும்தான் கிடைத்துள்ளது.

அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா, கோடாரிக்காம்புகளான கருணா, பிள்ளையான் போன்ற நபர்களுக்குக் கிடைத்த அளவுக்கு பெருந்தொகை கிடைக்கவில்லை.

இதோ! மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது.

இந்த வாய்ப்பு ஆண்டவனால் (புத்தரால்) அளிக்கப்பட்டது. இறுகப் பற்றிக்கொள்ளவும். எங்கள் ஆலோசனையைக் கேட்டு பின் வரும் கோரிக்கைகளை பிரகடனம் செய்து அறிவிப்பீர்களானால் சிங்கள மக்களும் தலைவர்களும் உங்களை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்கள்.

(01) 1955 ஆம் ஆண்டு சிங்கள மொழியை 24 மணி நேரத்தில் ஆட்சிக்குக் கொண்டு வருவேன் என்று பண்டாரநாயக்காவை இந்தப் பிரபாகரன்தான் அறிக்கைவிட்டு தூண்டிவிட்டார்.

(02) 1958 ஆம் ஆண்டுக் கலவரம் சிங்கள மக்களால் ஏற்படுத்தப்படவில்லை. சிறி என்ற சிங்கள எழுத்தை இந்தப் பிரபாகரன்தான் தார்பூசி அழித்தார். அதனால்தான் அப்பாவியான சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டனர்.

(03) தமிழர்களின் பூர்விகப் பிரேதசங்களில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்யும்படி 1948 ஆம் ஆண்டு பிரபாகரன் அறிக்கை விட்டதனால்தான் டி..எஸ். சேனாநாயக்கா குடியேற்றங்களைச் செய்தார்.

(04) 1961 ஆம் ஆண்டு சிங்கள மொழியை இலங்கை அரசின் நிர்வாக மொழியாக்கி சிறிமாவோ பண்டாரநாயக்கா உத்தரவிட்டார். பிரபாகரன் அறிக்கைவிட்டதனால்தான் அந்த அம்மையார் அப்படிச் செய்தார்.

(05) இறுதியாக 1972 ஆம் ஆண்டு இலங்கையை தன்னிச்சையாக “சிறிலங்கா சிங்கள குடியரசு” என்று அறிவித்து நாட்டின் அரசியல் அடிப்படைச் சட்டங்களை (Constitution) சிறிமாவோ மாற்றினார். இதற்கு யார் காரணம், பிரபாகரனின் கொலைவெறிக்குப் பயந்துதான் அந்த அம்மையார் இப்படி மாற்றியமைத்தார்.

இப்படி நீங்கள் பிரகடனப்படுத்தினால் சிங்களத் தலைவர்கள் வியந்து விடுவார்கள். இப்படியான ஓர் அறிவாளியை நாம் பயன்படுத்தாது விட்டது மகாதவறு. இப்படியான உண்மையை இதுவரை யாரும் சொன்னது கிடையாது! அகிம்சாவாதிகளான சிங்கள மக்களை அயோக்கியர்கள் ஆக்கியது இந்தப் பிரபாகரன்தான் என்று உண்மையை அறிந்து விடுவார்கள்.

இதன் மூலம் இனி வருங்காலத்தில் நீங்கள் ஓய்வெடுக்க ஐரோப்பா போக வேண்டியதில்லை. யூனைடெட் ஸ்ரேற்ரில்தான் இனி ஓய்வு.

அங்கு சென்றதும் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்ற வேண்டும் என்று விண்ணப்பிக்கவும். அங்கும் பிரபாகரனின் இந்தச் சதிவேலைகளைச் சொல்லி சிங்கள மக்களை உலகின் உன்னத மக்களாக வர்ணிப்பீர்களாக!

நன்றி!

பருத்தி வேந்தன்.

No comments: